இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நீதித்துறையின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகின்றன என்று உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் கொண்ட குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் நீதிபதிகள் இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூட்டாக அளித்த பேட்டியின் விபரம் வருமாறு :

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பதகாத நிகழ்வுகள் நடக்கின்றன. தேசத்திற்கும் இந்த நிறுவனத்திற்கும் நாங்கள் பொறுப்புடையவர்களாக இருக்கிறோம். எனினும் எங்கள் முயற்சிகள் தலைமை நீதிபதியின் போக்கில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதில் வெற்றி அடையவில்லை. நீதித்துறையில் குளறுபடிகள் நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நீடிக்காது. நீதித்துறையின் குளறுபடிகள் குறித்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான்கு பேரும்  2 மாதத்திற்கு முன்பு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினோம் ஆனாலும் பலனில்லை.  வழக்குகளை பிரித்து கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. எந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும். எந்த எந்த காலத்தில் யார் விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவே முடிவு செய்கிறார். கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்ப தகாத நிகழ்வுகள் நடைபெறுகிறது. நாங்கள் மிகுந்த மன வேதனையுடன்,  ஒரு அசாதாரண சூழலில்தான் நாங்கள் செய்தியாளர்களை சந்திக்கிறோம். இதில் எந்த வித அரசியல் நோக்கமும் இல்லை. தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதும் எங்கள் நேர்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. தற்போது நீதித்துறையை பாதுகாக்கவே நாங்கள் செய்தியாளர்களை சந்திக்கிறோம். தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்வது குறித்து நாடுதான் முடிவு செய்ய வேண்டும். இதனை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே  எங்கள் நோக்கம் என்று தெரிவித்தனர்.

 

Leave A Reply

%d bloggers like this: