கோபி. ஜன.12-
சாயசலவை ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியபுலியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானிதாலுகா பெரிய புலியூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தயிர்
பாளையத்தில் பிரிண்டிங் சாய சலவை ஆலை அமைப்பதற்கான பணிகள் கடந்த நான்கு மாதங்களாக தனிநபரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம், இந்த சாய ஆலை அமைக்கப்பட்டால் ஆலை கழிநீரால் இப்பகுதியைச் சுற்றிலுள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடைந்து பலநூற்றுக்கணக்கான விவசாயகிணறுகள் பாதிக்கும். இதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். மேலும், அப்பகுதி முழுவதும் கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு ஆஸ்துமா மற்றும் தோல் வியாதிகளால் அவதிக்குள்ளாக நேரிடும். ஆகவே, இந்த ஆலை அமைக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சாய ஆலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வியாழனன்று பெரியபூலியுர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜு
தலைமை வகித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில தொழிற்சங்கத் தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரவீந்தரன் மற்றும் நிர்வாகிகள் முனுசாமி, அய்யாவு, நல்லமுத்து, ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், வடக்கு தயிர்பாளையம், வளையக்கார பாளையம், வாரக்காடு, பெரியபுலியூர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.