திருப்பூர், ஜன.12-
திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தன்னை கடத்தி தூக்கி சென்றதாக 11 வயது சிறுவன் கடத்தல் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது.

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் செந்தில், லாரி டிரைவர். இவரின் மனைவி அனுராதா. இவர்களது மகன் கபிலன் (11). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி முடிந்த பின்னர் மாலையில் வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் படித்து வந்தார். இந்த நிலையில் திங்களன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வழக்கம்போல், கபிலன் சைக்கிளில் டீயூசனுக்கு சென்றான். ஆனால் சென்ற சில நிமிடங்களிலேயே கபிலன் வீட்டிற்கு திரும்பியதால் அவரது தாயார் ஏன் டியூசனுக்கு போகவில்லை? என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் கபிலன், நான் சைக்கிளில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தன்னை குண்டு கட்டாக தூக்கி கடத்தி செல்ல முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பி வந்தாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அனுராதா புகார் அளித்தார் இதுதொடர்பாக காவல்துறையினர் சிறுவனிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் சிறுவன் தன்னை கடத்தி சென்றதாக கூறிய பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செத்யனர் அப்போது, சிறுவனை யாரும் கடத்தி செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனிடம் மீண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் இதில் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தன்னுடைய தாயார் திட்டியதாகவும், மதிப்பெண் பட்டியலை டியூசன் ஆசிரியையிடம் கொண்டு காண்பிக்குமாறு தாய் கூறியதாலும் டியூசனுக்கு போவதற்கு பயந்து இதுபோன்ற கடத்தல் நாடகமாடியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுவன் கபிலனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.