திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் முறையாக கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றாததால் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் போட்ட உத்தரவின் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக அனைத்து தோல் தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிலில் பல கோடி ரூபாய் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு வருமாறு.
மாசுக்கட்டுப்பாடு வாரியம் சில விதிமுறைகளின்படி தற்போது திண்டுக்கல்லில் இயங்கும் தோல் தொழிற்சாலைகளை இழுத்து மூடப்பட்டு உள்ளது. . திண்டுக்கல்லில் ஆரம்பத்தில் 85 தோல் தொழிற்சாலைகள் இருந்தன. அரசு விதிமுறைகளின்படி தோல் தொழிற்சாலைகளை நடத்த முடியாமல் படிப்படியாக குறைந்து 42 தோல் தொழிற்சாலைகள் தான் இயங்கி வருகின்றன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டவிதிகளின்படி இதே போல் 1996ல் தோல் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. தோல் தொழிற்சாலைகளின்; கழிவு நீர் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதாகவும், நிலத்தடி நீர் கெட்டுப் போனதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்தன. திண்டுக்கல் ஒன்றியப்பகுதியில் கொட்டப்பட்டி, பொன்மாந்துரைப்புதுப்பட்டி, சின்னபள்ளபட்டி, பெரியபள்ளபட்டி,தாமரைக்குளம் பாசன விவசாயிகள், குடகனாறு பாசன விவசாயிகளின் நிலங்கள் உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. தோல் கழிவு நீர் இந்த பகுதி நிலங்களை பாழ்படுத்தியதோடு குடகனாற்றில் கலந்து வேடசந்தூர் வரை நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் போராட்டத்தின் விளைவாக பேகம்பூரில் தோல் தொழிற்சாலை பொதுக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு பாதிப்பு குறைந்தது. ஆனால் விவசாயிகள் தங்களது பாழ்பட்ட நிலத்திற்கு நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாயிகள் குறை தீர் கூட்டம் மற்றும் போராட்டங்கள், மாநாடுகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. அதன் பின் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் தோல் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நஷ்டஈடு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னமும் திண்டுக்கல் பகுதியில் சவேரியார்பாளையம், தோமையார்புரம், பூதமரத்துப்பட்டி, பெரியபள்ளபட்டி, சின்னபள்ளபட்டி, குட்டியபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் பயன்பாட்டுக்கு லாயக்கற்றதாக உள்ளது. தோல் தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் உப்பின் காரணமாக நிலம் உப்புபாரித்து காற்றோடு கலந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டடங்களும் கூட உப்புக்காற்றால் சுவர்களும் உதிரும் நிலை உள்ளது. கட்டடங்களின் அஸ்திவாரங்களும் வலுவிழந்து உள்ளது. கழிவு நீரை வெளியேற்றும் தோல்தொழிற்சாலைகள் வேதிப்பொருள் கலந்த கழிவுநீரை சுத்திகரிக்க குழாய்கள் மூலம் பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. ஆனால் அங்கு சரியாக சுத்திகரிக்காமல் அருகில் உள்ள குளத்தில் அப்படியே அனுப்பப்படுவதாக புகார் எழுந்தள்ளது. இதன் காரணத்தினால் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் அனைத்து தோல் தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டு உள்ளது. இதனால் பல கோடிரூபாய் இழப்புஏற்பட்டு உள்ளது.
தோல் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். என திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் கூறுகையில்,
திண்டுக்கல்லில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் ஆரம்பத்தில் இயற்கையில் பதனிடும் பொருட்களாக சுண்ணாம்பு, கடுக்காய், பட்டை ஆகியவற்றைக் கொண்டு பதனிட்டதால் நிலம் மாசடையவில்லை. மத்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் முழுக்க முழுக்க தோல் பதனிடும் தொழிலை வேதிப்பொருள்கள் மூலம் பதனிட வலியுறுத்தினர். இதன் மூலம் 40 நாட்கள் நடைபெறவேண்டிய பதனிடும் வேலை 7 நாட்களில் பதனிட்டனர். தோல் ஏற்றுமதி மூலம் அந்நியச்செலவாணி கிடைக்கும் என்ற லாபநோக்கத்தின் அடிப்படையில் இது போன்ற மத்திய அரசின் உத்தரவால் தான் இன்றைக்கு எல்லா இடங்களிலும் சுற்றுச்சூழல் மாசடைந்தும், நிலம் மாசடைந்தும், நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளது. அதிகாரிகளின் முறையான அறிவுறுத்தல் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. மேற்குவங்கம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தோல் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியை அரசே சுத்திகரிக்கும் நிலையம் அமைத்து சுத்திகரிக்கிறது. ஆனால் திண்டுக்கல்லில் அரசு ஏற்று நடத்துவதற்கு பதிலாக தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் விட்டுவிட்டு தனக்கும் இந்த பிரச்சனைக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று ஒதுங்கிக்கொண்டது. கடந்த 15 நாட்களாக வேலை இழந்தும். வாழ்வாதாரத்தை இழந்தும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.250 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். விரைவில் இந்த தொழிற்சாலைகளை இயங்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் உப்புத்தன்மை 2100 டி.டி.எஸ். என இருக்க வேண்டும். வேண்டும். தற்போது நீரின் உப்புத்தன்மை 5 ஆயிரம் டி.டி.எஸ் ஆக உள்ளது. கடந்த 3 வருடங்களாக தோல்தொழிற்சாலை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியும் செய்யாத காரணத்தால் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் உத்தரவின் பேரில் தற்போது திண்டுக்கல்லில் செயல்படும் அனைத்து தோல் தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன. தற்போது சுத்திகரிக்கும்பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் ஆய்வு செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் தோல் தொழிற்சாலைகள் மீண்டு;ம் இயங்க உத்தரவிடப்படும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.