தாராபுரம், ஜன.11 –
தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம் சர்ச் ரோட்டில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கிராமப்புற மற்றும் நகர்புறத்தை சேர்ந்த 3 ஆயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் இம்மாணவிகள் தாலுகா அலுவலகம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் வந்து தங்களது கிராமங்களுக்கு பேருந்தில் ஏறி செல்கின்றனர். இதற்கிடையே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் மாணவிகள் சாலையை கடக்க ஏதுவாக போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இங்கு பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து காவலர்கள், மகளிர் காவலர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஆகியோர் திடீரென திரும்பப் பெறப்பட்டனர். இதனால் பள்ளி மாணவிகள் வாகன நெரிசலால் பெரும் சிரமத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாகி சாலையை கடக்க இயலாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது. இதுகுறித்து தீக்கதிரில் கடந்த ஜன.4 ஆம் தேதியன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தீக்கதிர் செய்தியின் எதிரொலியாக தற்போது அப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: