திருப்பூர், ஜன. 11 –
சுதந்திர போராட்டத்தில் உயிர்நித்த திருப்பூர் குமரன் நினைவு தினத்தை தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் கடைபிடிக்காமல் மறந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் எத்தனையோ தலைவர்கள் போராட்ட களத்தில் சிறைபட்டும், தடியடிபட்டும், உயிர்த் தியாகம் செய்தும் ஆங்கிலோயர்களிடமிருந்து இருந்து சுதந்திரம் பெற்று கொடுத்தனர். இதில் தனது 28 ஆவது வயதிலேயே வெள்ளையர் ஆட்சியின் காவலர்களால் அடிபட்டு தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறே உயிர் நீத்தவர் திருப்பூர் குமரன். இவரது நினைவு தினமான ஜன.11ம் தேதியை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஆண்டுதோறும் பல்வேறுஅமைப்புகள் சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது 86 ஆவது நினைவுதினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூரிலுள்ள குமரன்நினைவிடத்திலும், குமரன் நினைவு ஸ்தூபி உள்ள இடத்திலும் பள்ளி மாணவ, மாணவிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலிசெலுத்தினர். ஆனால், தமிழக அரசின் சார்பிலே, மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ குமரனின் நினைவிடத்தில் எவ்வித நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. இது அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி சிறுவயதிலேயே தன் உயிரை கொடுத்த திருப்பூர் குமரனின் நினைவு நாளில் அவரது தியாகத்தையும், நினைவையும் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய முறையில் நிகழ்ச்சியை நடத்தியிருக்க வேண்டும். இதில் கூட கவனம் செலுத்தாமல் அரசு நிர்வாகம் அலட்சியமாக இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது என்று தியாகி குமரன் நினைவு இடங்களில் அஞ்சலி செலுத்த வந்தோர் வேதனை தெரிவித்தனர்.

– த.அருண் கார்த்திக்

Leave A Reply

%d bloggers like this: