திருப்பூர், ஜன. 11 –
திருப்பூரில் கூட்டுக் கொள்ளை நடத்துவதற்குத் திட்டமிட்டு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

 திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள நெருப்பெரிச்சல் ரோட்டில் கருப்பராயன் கோவில் அருகே ஒரு ஆம்னி வேனில் சந்தேகத்திற்கிடமாக ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் அந்த பகுதிக்கு ரோந்து சென்று அந்த கும்பலை அதிரடியாக சுற்றி வளைத்தனர். இதன்பின் காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். மேலும் 7 பேர் கொண்டஅந்த கும்பலிடம் அரிவாள், பெரிய கத்தி மற்றும் உருட்டு கட்டைகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இதையடுத்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள், சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கருப்பூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன், பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை அடுத்த படலூர் பகுதியை சேர்ந்த திவாகர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்த ரஞ்சித், நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த சேரம்பாடியை சேர்ந்த பிரதீப், கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்குமார், திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த அனந்தகுமார், உடுமலை பெரியகோட்டை பகுதியை சேர்ந்த மணிண்டன் என்பது தெரியவந்தது.

மேலும், இவர்கள் திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் சுற்று வட்டாரத்தில் தங்கி பயரங்ர ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை தாக்கி கூட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதில் ஜெகநாதன், திவாகர், மணிகண்டன் ஆகிய 3 பேரும் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி சின்னபொம்மநாயக்கன் பகுதியில் நள்ளிரவில் வீட்டு கதவை உடைத்து பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்று தூங்கி கொண்டிருந்த தங்கராஜ்-பரமேஸ்வரி தம்பதியை தாக்கி 10 சவரன் தாலி சங்கிலியை பறித்து சென்றவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து தங்க சங்கிலி, ஆம்னி வேன் மற்றும் ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: