புதுதில்லி, ஜன. 11-

சில்லரை வர்த்தகத்துறையில்100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒற்றை இலச்சினை (single brand) சில்லரை வர்த்தகத்துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திட மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. இந்நடவடிக்கையானது நாட்டிலுள்ள சில்லரை வர்த்தகர்களையும், கடைக்காரர்களையும் கடுமையாகப் பாதித்திடும்.

இந்த நடவடிக்கையானது மோடி அரசாங்கம் பல இலச்சினை (multi-brand) சில்லரை வர்த்தகத்திலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது. பாஜக எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைவதைக் கடுமையாக எதிர்த்தது. இப்போது ஆட்சியில் அமர்ந்தபின் தன் நிலையை தலைகீழாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏர் இந்தியா நிறுவனத்திலும் 49 சதவீதம் வரை முதலீடு செய்வதற்கு அந்நிய நிறுவனங்களை அனுமதித்து முடிவினை மேற்கொண்டிருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் மோடி அரசாங்கம் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை அந்நிய விமான நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் குறித்து ஆய்வு செய்த மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை மீதான நாடாளுமன்ற நிலைக்குழுவானது அரசாங்கம் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை மறு ஆய்வு செய்திட வேண்டும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் அதன் கடன்களை ரத்து செய்வதுடன் அது தன்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கு ஐந்தாண்டு காலம் அவகாசம் அளித்திட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரைக்கு மத்திய அரச செவிசாய்த்திட வேண்டும்.

இவ்வாறு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.

(ந,நி.)

Leave A Reply

%d bloggers like this: