சென்னை: எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே என எச்.ராஜாவிற்கு பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

என் இனிய தமிழ் மக்களே!

 தமிழகத்தில், தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம் என்னை இரவெல்லாம், தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தில் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று நம் கொடுப்பினை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங் கவிஞன், கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் தமிழைத் திசைகள் தோறும் தெரியப்படுத்தியவர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

இந்திய அரசின், பத்மஸ்ரீ, பத்மபூசன், சாகித்ய அகாடமி என தன் படைப்புகளால் தமிழை, உலக உச்சிக்குக் கொண்டு போன பெருமைக்குரிய தமிழன், வைரமுத்து.

மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டைக்காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிடைப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படிப் பேசலாம்? வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல தமிழனத்தின் பெரு அடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு படைப்பாளன் தன் கருத்துக்களை சொல்லலாம். இல்லை மேற்கொள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக் கேட்க எவனுக்கு அதிகாரமில்லை.

சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடை தோறும், முழங்கி அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவன் பேசுவது,
எச்.ராஜாவே, நீ பேசியது அநாகரீகத்தின் உச்சம், தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை இழிசொல்லால் இழிவுப்படுத்தி விட்டாய்.

வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையிலிருந்து தெருவுக்குக் கொண்டு வந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா?

H.ராசாவே
திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை உணர்ந்து கொள்……..

கொண்டாட வேண்டிய ஒரு கவிஞனை அநாகரீகமாய் பேசும் ராசாவே! இப்படி பேச உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

உன்னால் தமிழினத்திற்கு வைரமுத்து போல இலக்கியம் படைக்க முடியுமா? அடையாளப்படுத்தப்பட்ட தமிழனை அழிக்க நினைக்காதே…….

என் வம்சாவழி,

எங்கள் உணர்ச்சிகளின், வடிகாலே ஆயுதங்கள் தான்….

காலமாற்றமும், விழிப்புணர்வும் தான்,

எங்களை ஆயுதக்கலச்சாரத்திலிருந்து மாற்றி வைத்தது…….

கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை….

எங்கள் தாய் வழி சகோதர, சகோதரிகளை,

எங்கள் தொப்புள்க் கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்தி விட்டாய்…..

உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது…..

தமிழ் உணர்வுகளைச் சிதைத்தது…..

நீ, தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய்…

பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ…

நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமேயொழிய

தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும்

இழக்கவில்லை……..

எச்சரிக்கை!

மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கி விடாதே!

இப்படித்தவறாகப் பேசும் பராரிக்கு உடனிருக்கும்

நல்ல தமிழ்த் தலைவர்கள்

பாடம் புகட்டக் கடமைப் பட்டவர்கள் என்பதை

இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன்.

எளிய, ஏழைக்குடும்பத்தில் பிறந்து தமிழை 23 மொழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தவரை எப்படி உன்னால் பேச முடிகிறது. வைரமுத்துவின் படைப்புகளப் படித்து, ஆராய்ச்சி செய்து நிறையப் பேர் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்கள் அவரின் படைப்புகளைப் பல கல்லூரி, பல்கலைக்கழகங்கள் பாடமாய் வைத்திருக்கிறார்கள். அவரது உழைப்பையும் முயற்சியையும் பார்த்து எத்தனையோ இளைஞர்கள் முன்னுக்கு வந்திருக்கிறார்கள்.

நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஓர் வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படி பேச முடியும்?

உன்னைப் போன்ற மனிதர்களால் தான் இந்தியா துண்டாடப்ட போகிறது என்று அச்சம் எனக்கு வருகிறது.

கவனமாகப் பேசுங்கள் ….

ராசாவே!….. உன்னைப்போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் …….

கவிப்பேரரசு வைரமுத்து போல சில நல்ல அடையாளங்கள் தான் இருக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: