ஈரோடு, ஜன. 11-
ஈரோட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கண்ணியம்மாள் (23). இவர் முதல் பிரசவத்திற்காக ஈரோடு திண்டல் கேஏஎஸ் நகர் பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இதன்பின் கண்ணியம்மாள் கர்ப்ப காலசிகிச்சையினை ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காககண்ணியம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றையதினம் இரவு சுமார் 10 மணியளவில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த ஒரே ஒரு செவிலியர் மட்டும் கண்ணியம்மாளை பிரசவத்திற்காக அழைத்து சென்றுள்ளார். அவருக்கு உதவியாக சுகாதார பணியாளரும் உடனிருந்துள்ளார்.

நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் பிரசவ வார்டில் இருந்து பதட்டத்துடன் வெளியே வந்த செவிலியர், கண்ணியம்மாளுக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது என உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், கண்ணியம்மாளுக்கு கடுமையான ரத்தப்போக்கு உள்ளதால் உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணியம்மாளின் கணவர் வடிவேல் மற்றும் உறவினர்கள் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் கண்ணியம்மாளை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கண்ணியம்மாளின் உறவினர்கள் கூறுகையில், மருத்துவமனையில் ஒரே ஒரு செவிலியர் மட்டும் தான் பணியில் இருந்தார். மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. மருத்துவர் யாரும் இல்லாமல் செவிலியர் மட்டுமே பிரசவத்தை பார்த்ததால்தான் கண்ணியம்மாளுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதுடன், குழந்தையும் இறந்துள்ளது என குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுச்சாமி கூறுகையில், ஈரோடு திண்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒருமருத்துவர் மட்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பகல் மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே இவர் பணியில் இருப்பார். இரவு நேரத்தில் நோயாளிகளுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவர் வந்து சிகிச்சை பார்ப்பார். கண்ணியம்மாளுக்கு பிரசவத்தின்போது குழந்தை வெளியே வருவதில் ஏற்பட்ட பிரச்சனையால் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இருப்பினும், கண்ணியம்மாளுக்கு சிகிச்சை பார்த்த செவிலியரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.