சண்டிகர்;
ஹரியானா மாநில பாஜக அரசானது, 10 பகவத்கீதை புத்தகங்களை, ரூ. 3 லட்சத்து 80 ஆயிரத்திற்கு வாங்கியதாக கணக்கு காட்டி, அப்பட்டமான பகல் கொள்ளையை அரங்கேற்றி இருக்கிறது.நடிகர் – நடிகைகளுக்கும் மக்கள் வரிப்பணத்தை லட்சக்கணக்கில் வாரியிறைத்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் அண்மையில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய மாபெரும் மகாபாரத விழாவை, ஆளும் பாஜக அரசு நடத்தியது. ஹிசாரைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் என்பவர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான காண்ட்ராக்ட்டுகளை ரூ. 15 கோடிக்கு எடுத்திருந்தார். இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.

இதனிடையே, குருஷேத்திரம் விழா தொடர்பான செலவு விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு தற்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது.
“மகாபாரதம் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் உமாபாரதி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஹரியானா, இமாசலப் பிரதேச ஆளுநர்கள் கலந்து கொண்ட நிலையில், இவர்களை உள்ளடக்கிய முக்கிய பிரமுகர்கள் 10 பேருக்கு பகவத்கீதை புத்தகங்கள் பரிசாக கொடுக்கப்பட்டதாகவும், இந்த 10 புத்தகங்களை வாங்குவதற்கான செலவு மட்டும் ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம்” என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விழாவில் ‘ராதா-கிருஷ்ணன்’ நாட்டிய நாடகத்தில் பங்கேற்று நடனம் ஆடிய நடிகையும், பாஜக எம்எல்ஏ-வுமான ஹேமமாலினிக்கு ரூ. 15 லட்சம் சம்பளமும், நடிகரும் தில்லி பாஜக தலைவருமான மனோஜ் திவாரிக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியான இந்த புள்ளி விவரங்களின் மூலம், மக்களின் வரிப்பணத்தை பாஜக ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் அள்ளிவீசி வீணடித்திருக்கிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, 10 பகவத் கீதை புத்தகங்களை இந்த அளவுக்கு விலை கொடுத்து வாங்க முடிவு எடுத்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: