கோவை, ஜன.10-
தொழிலாளர்களுக்கு விரோதமான துரோக ஒப்பந்தத்தை கண்டித்து புதனன்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு, நிலுவை பணப்பயன்களை வழங்கு, பழைய பென்சன் திட்டத்தை அமலாக்கு, ஓடுவதற்கு லாயக்கற்ற பேருந்துகளை இயக்க அனுமதிக்காதே என வலியுறுத்தி கடந்த ஜன.4 ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதனன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை அரசு போக்குவரத் துத்தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எல்பிஎப் ரத்தினவேல், பெரியசாமி, சிஐடியு காளியப்பன், அருணகிரிநாதன், ஏஐடியுசி கே.எம். செல்வராஜ் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். முடிவில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

ஈரோடு
ஈரோடு திண்டல் சாலை அருகேயுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு தொமுச பொதுச்செயலர் வி.குழந்தைசாமி தலைமை வகித்தார்.அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.முருகையா போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினர். இதில், தொமுச நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி நிர்வாகி சுகுமார், எச்எம்எஸ். நிர்வாகி சண்முகம், ஐஎன்டியுசி நிர்வாகி துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக, செவ்வாயன்றுபணியிடை நீக்க உத்தரவை கண்டு அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த பவானியைச்சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளி தேவராஜ்
(46) மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர்
தாராபுரத்தில் தொமுச திருப்பூர் மண்டல செயலாளர் துரைசாமி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கனகராஜ், எல்பிஎப் செயலாளர் சேனாபதி, பொருளாளர் சுந்தர்ராஜ், சிஐடியு செயலாளர் ராமசாமி, தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியம், டீடீஎஸ்எப் சங்கத்தின் நிர்வாகி சோமு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் பொன்னுசாமி, முத்துசாமி, வெள்ளைசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தொழிலாளர் நல அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஓய்வுபெற்றோர் ஆதரவுபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சார்ந்த ஓய்வுபெற்ற ஊழியர்கள் புதனன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்றோர் அமைப்பின் கூட்டுக் கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் தலைவர் சந்திரன், செயலாளர் சின்னசாமி மற்றும் மதன், சுரேந்திரன், அரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.