உதகை, ஜன.10-
நீட்ஸ் திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்கள் உற்பத்தி செய்ய முன்வருமாறு தொழில் முனைவோர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 15ம் தேதி முதல் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களும் முழுமையாக தடை செய்யப்பட உள்ளது. இதனால் பிளாஸ்டிக் மாற்று பொருள்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே, அத்ததைய பொருட்களான கரும்பு கழிவிலிருந்து தயாரிக்கப்படும் தட்டுகள், கிண்ணங்கள், பாக்குமட்டை தட்டுகள், ஸ்புன், துணி பைகள், சணல் பைகள், காதிக பைகள் போன்றவற்றை நீலகிரி மாவட்டத்திலேயே உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள படித்த தொழில்முனைவோர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (நீட்ஸ்) 25 சதவிகிதம் மானியம் மற்றும் 3 சதவிகித வட்டி மானியத்துடன் கடன் பெற உதவி செய்யப்படும். அதேபோன்று ஒரு லிட்டர் மற்றும் அதற்கும் கீழான தண்ணீர் பாட்டில்களையும் தடை செய்ய இருப்பதால் முக்கிய சுற்றுலா தளங்களில் குடிநீர் தானியங்கி இயந்திரம் வைத்து குடிநீர் விற்பனை செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறது. குடிநீர் தானியங்கி இயந்திரம் வைப்பதற்கு இடம் மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கி தரப்படும். மேலும், நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் புதுமையான திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விபரங்களுக்கு 0423-24443947 மற்றும் 9842565658 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அலுவலரிடம் ஆலோசனை பெறலாம். நீலகிரி மாவட்டத்தை இயற்கை சூழல் மாறாமல் காத்திட எடுத்திருக்கும் நடவடிக்கையான பிளாஸ்டிக் பொருட்கள் உபயோக தடையால் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் தேவையின் அடிப்படையில் மேற்கண்ட திட்டங்களில் தொழில் துவக்கி பயனடையுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.