புதுதில்லி, ஜன. 10-

தேர்தல் நிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:

“தேர்தல் நிதி குறித்து மேற்கொள்ளவேண்டிய ‘சீர்திருத்தங்கள்’ குறித்து பரிந்துரைகள் அனுப்பலாம் என்று தாங்கள் கேட்டிருப்பதால் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன்.

சமீப காலங்களில் தேர்தல்கள் என்பது பணம்படைத்தவர்களின் பக்கம் அதிகமான அளவில் சாய்ந்திருப்பதால் தேர்தல் நிதி எந்த அளவிற்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தேர்தல்களில் போட்டியிடுவது இப்போதெல்லாம் வசதி படைத்த வர்த்தகப் புள்ளிகள் மட்டுமே போட்டியிடக்கூடிய அளவிற்கு மாறி இருக்கிறது. எனவே இதில் கடுமையான சீர்திருத்தங்கள் அவசியமாகும்.

முதலாவதாக, தேர்தலுக்கு கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு  நிதி அளிப்பது தடை செய்யப்பட வேண்டியது நல்லதொரு நடவடிகையாக இருந்திடும். கார்ப்பரேட்டுகள், அதிலும் குறிப்பாக பெரும் கார்ப்பரேட்டுகள், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பது என்பதை, தங்கள் சார்பான ஒரு முதலீடாகவே கருதுகிறார்கள் என்றும், தங்களுக்குப் பொருந்தக்கூடிய விதத்தில் அரசின் கொள்கைகளை மிக எளிதாகவும் மிக வேகமாகவும் நடத்துவதற்கான ஒரு வலுவான முறையாகவும் கருதியே அவ்வாறு நிதி அளிக்கிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வந்தபின்னர் தங்களுக்கு நிதி அளித்த கார்ப்பரேட் நண்பர்களுக்கு பொருந்தக்கூடிய விதத்திலேயே கொள்கைகளை உருவாக்குகின்றன. இந்த கார்ப்பரேட்டுகள் லஞ்ச ஊழலுக்கு மிகப்பெரிய அளவில் வழியேற்படுத்திக் கொடுக்கிறார்கள். இது நம்முடைய ஜனநாயக அமைப்பையே அரித்துக் கொண்டிருக்கிறது.   கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்குத் தடை விதிக்கவில்லை என்றால், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. 1968இலிருந்து கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதற்கு இருந்து வந்த தடையை 1985இல் அரசாங்கம்  மாற்றியமைத்தது. ஆனால் அதனால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் அல்லது கறுப்புப் பணம் நிதியாக வந்து சேர்வது பிரச்சனைகளை மேலும் மோசம் ஆக்கியுள்ளன.

தற்சமயம், தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்வதற்கு ஒரு வரையறை இருந்தபோதிலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செலவு செய்வதற்கு  வரையறையே இல்லை. இது தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவு குறித்த வரையறையைக் கேலிக்கூத்தாக்கி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்கு தெரியும்.  தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் செலவிடுவதற்கும் ஒரு வரையறையைக் கொண்டுவர வேண்டும் என்றும், இதனை மீறும் அரசியல் கட்சிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்திய சமூகத்தின் வலுவான இதர பிரிவினரைப் போலவே கார்ப்பரேட்டுகளும் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்வதற்குக் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். இதற்கு அவர்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியை தேர்தல் செலவினங்களுக்காக அரசாங்கத்திடம் வழங்கிட வேண்டும்.

அரசாங்கத்திடம் நிதி அளித்து, அதில் குறைந்தபட்சம் ஒரு கணிசமான பகுதி தேர்தலுக்குச் செலவிட வேண்டும் என்கிற நடைமுறையைக் கொண்டுவராது, அரசியல் கட்சிகளுக்கு மட்டும் நிதி அளிப்பதன் மூலம் ஊழலை ஒழித்திட முடியாது. இதனை தினேஷ் கோஸ்வாமி குழுவும், இந்தர்ஜித் குப்தா குழுவும் ஆழமான முறையில் ஆய்வு செய்து பரிந்துரைத்திருக்கின்றன.

அதேபோன்று, கார்ப்பரேட்டுகள், கார்ப்பரேட் சமூகப் பொறுப்புகள் போன்று ஒரு பொது நிதியம் உருவாக்கி, அதில் தங்களுடைய வருமானத்தில் ஒருபகுதியை நன்கொடையாக அளித்திடக் கேட்டுகொள்ளப்படலாம். அத்தகைய பொதுநிதியத்திற்கு எந்த எந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதற்கு அவை முந்தைய தேர்தலில் வாங்கிய வாக்களிப்பின் சதவீதத்தின் அடிப்படையில் அல்லது அவை வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் முடிவு செய்திடலாம். இவ்வாறு செய்வது என்பது இந்திய ஜனநாயகம் ஆரோக்கியமான முறையில் செயல்படுவதற்கு வழி வகுத்திடும். இதுவே, இப்போதுள்ளதைவிட,  ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை உடையதான முறையாக அமைந்திடும்.

உதாரணமாக, ஜெர்மனியில் அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குகிறது. அது அங்கே அது கட்சிகள் முந்தைய தேர்தலில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெற்றுள்ள இடங்கள் மற்றும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் அரசியல் கட்சிகள் தாங்கள் வசூலித்த நிதியையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றன.

இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்றும், அரசியல் கட்சிகளுக்கு நிதி வந்து சேர்வது மேலும் வெளிப்படைத்தன்மையுடன் அமைந்திட வேண்டும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

சமீபத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள நடைமுறைகள், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் தேவைப்படும் தூய்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை முற்றிலுமாக மறுதலிக்கக்கூடிய விதத்திலேயே அமைந்திருக்கிறது என்று கூறுவதற்கு வருந்துகிறேன்.

தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவது என்பது மிகவும் பிற்போக்கான நடவடிக்கையாகும். இதன்மூலம் நன்கொடையாளர், நன்கொடையைப் பெற்றவர், நன்கொடை அளிக்கப்பட்ட தொகை ஆகிய மூன்றுமே அரசின் ரகசியமாக நடைமுறையில் மாறிவிடுகிறது. இது ஆளும் கட்சியினருக்கு  நிதி கொடுப்பவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பான ஒன்றாக மாறிவிடுகிறது.

மேலும் கம்பெனிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்கு இருந்த உச்சவரம்பை அகற்றிவிட்டதன்மூலம், அவர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை அரசியல்  கட்சிகளுக்கு வழங்குவதற்கான வழிவகையினை மிகச்சிறப்பாக செய்து தந்திருக்கிறீர்கள். இந்த நடவடிக்கையும் நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகவும் ஆழமான முறையில்  கேடு விளைவித்ததிடும் ஒரு நடவடிக்கையேயாகும்.

ஒரு நிதிச் சட்டமுன்வடிவின் மூலமாக, அந்நிய நிறுவனங்கள் பங்களிப்புகளை முறைப்படுத்தல் சட்டத்தில் பின்தேதியிட்டு கொண்டுவந்த திருத்தத்தின் மூலம், இந்த அரசாங்கம் அந்நிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளின் கஜானாக்களைநிரப்பிட வழியேற்படுத்தித் தந்திருக்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கக்கூடிய ஓர் அபாயகரமான நடவடிக்கையாகும்.

அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக, அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற நடைமுறைகள், முன்பிருந்ததைவிட மிக மோசமான ஒன்று என்று நாங்கள் ஆழமாகக் கவலைப்படுகிறோம். தேர்தல் பத்திரங்கள் மார்க்கம் என்பது அரசியல் கட்சிகளுக்கு இரண்டகமான முறையில் நிதி வருவதை பொதுமக்களின் கண்களில் இருந்த மறைப்பதற்கான மார்க்கமேயாகும்.

தேர்தல் பத்திரங்களும், அந்நிய நிறுவனங்கள் பங்களிப்புகளை முறைப்படுத்தல் சட்டத்தில் பின்தேதியிட்டு கொண்டுவந்த திருத்தமும் (இது அந்நிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதை அனுமதிக்கிறது), கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்கு இருந்துவந்த உச்சவரம்பை நீக்கியதும் மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளாகும். இவை அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும்.

தங்கள் அரசாங்கம் இவற்றை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஏனெனில் மேற்கண்ட மூன்றுமே அரசியல் கட்சிகள் நிதி பெறுவதை கறுப்புப் பெட்டியாக இருந்து மூடி மறைப்பதால், பொதுமக்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை.

தேர்தல் நிதி தொடர்பான இந்த சம்பாஷணை ஓர் ஆழமான விவாதத்திற்கு இட்டுச்செல்லப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அவ்வாறு விவாதங்கள் மேற்கொண்டபின்னர் உங்கள்  அரசாங்கம் மேலும் தேவையான மற்றும் மேலும் ஒருங்கிணைந்த தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். (நீங்கள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்தபோது, நாங்கள் முன்வைத்த ஒரு பகுதி பிரதிநிதித்துவ அமைப்பு முறையை வரவேற்றீர்கள். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்தபின்னர், இப்போதுள்ள நடைமுறையே உங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதால், அதன் மீது அவ்வளவு ஆர்வம் இல்லை என்றே தோன்றுகிறது.)

இந்தப் புத்தாண்டில், இந்த அரசாங்கம் நம்முடைய ஜனநாயகத்தின் நலனுக்கு உகந்தவிதத்தில் புதிய நடவடிகைகள் எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போதுதான் இப்போது பணக்காரர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை மாறி, சாமானியர்களும் போட்டியிடமுடியும் என்ற நிலை உருவாகும். அதற்கேற்ற முறையில் தாங்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

(ந.நி.)

Leave A Reply