ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில்  100 சதவீகித நேரடி  அந்நிய  முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர்த்து கட்டுமான துறையில் நூறு சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கும் மத்திய மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான 2 வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு செய்யும் முடிவை மேற்கொள்ள முயன்ற போது பாஜக கடுமையாக எதிர்த்தது. இன்றைய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி இன்றைய அமைச்சர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்தனர். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் பட்சத்தில் இந்திய சில்லரை வர்த்தகம் முழுவதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்து விடும் என்று முழக்கினர்.


ஆனால் தற்போது படிப்படியாக சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வரும் முயற்சியில் மோடி தலைமையிலான பாஜக அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எளிமையாக தொழில் செய்யவும், அந்நிய முதலீடு அதிகரிக்கவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, ஒற்றை பிராண்ட்  சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  ஒற்றை பிராண்டுகளில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்று 49 சதவீத அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு செய்ய நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இனிமேல் அரசின் அனுமதியின்றி, 100 சதவீத அளவிற்கும்  இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு செய்ய முடியும்.

இதுமட்டுமின்றி, ஏர் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசின் அனுமதியுடன், 49 சதவீத அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதலீடு செய்யும் நிறுவனங்களில் வெளிநாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே 49 சதவீதத்திற்கு அதிகமாக முதலீடு இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏர்லைன்ஸ் இந்தியா நிறுவனம், அரசு நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்ள்ளது.

இதுமட்டுமின்றி கட்டுமான மேம்பாட்டு நிறுவனங்களில் மத்திய அரசின் ஒப்புதலின்றி, 100 சதவீத அளவிற்கு, அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு தற்போதைய மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான அருண்ஜேட்லி, “நுகர்வோர், விவசாயிகள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் நாட்டிற்கும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் அந்நிய நேரடி முதலீடு உள்ளது. அதனால் கடைசி மூச்சு வரை பாரதிய ஜனதா கட்சி அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும்” என கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதியன்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக இந்திய தேசத்தை பன்னாட்டு கார்ப்பரேட்களுக்கு கூறு போட்டு விற்கும் வேலையில் மோடி அரசு  படிப்படியாக ஈடுபட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக தற்போது சில்லரை வர்த்தகம், ஏர் இந்தியா மற்றும் கட்டுமான துறையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான ஏல அறிவிப்பினை மோடி அரசு வெளியிட்டிருக்கிறது என பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

 

Leave A Reply

%d bloggers like this: