கோவை, ஜன. 10-
அரசியல் சட்ட மேதை அம்பேத்கருக்கு கோவையில் சிலை அமைக்க வேண்டுமென கோவை மக்கள் மேடை வலியுறுத்தியுள்ளது.

இவ்வமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் சமூக நீதிக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம் தலைமையில் புதனன்று நடைபெற்றது. இதில் கோவை மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அஸ்ரப்அலி, ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, திராவிட விடுதலை கழகத்தின் நேருதாசு, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சரவணன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், கோவையில் புரட்சியாளர் அம்பேத்கருக்கு கோவை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகம் எதிரே சிலை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆனால், பல்வேறு காரணங்களைகாட்டி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சிநிர்வாகம் மற்றும் காவல்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனை கோவை மக்கள் மேடை கண்டிப்பதுடன், உடனடியாக கோவையில் அம்பேத்கருக்கு சிலை அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

மேலும், கோவை இடிகரை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல், அன்னூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து தாக்குதல், மேட்டுபாளையத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது தாக்குதல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆகவே, இத்தகைய செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தி நினைவு நாளில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழியேற்பு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கிற பொதுக்கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.