திருப்பூர், ஜன.10 –
மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பதாக கூறி திருப்பூர் அருகே மதுபோதையில் ஒருவர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால்பெரும் பரபரப்புஏற்பட்டது.

திருப்பூர் பி.என். சாலை பாண்டியன் நகர்அருகே காட்டையன் தோட்டம் பகுதியில்உள்ள உயர் அழுத்தமின் கோபுரத்தில் செவ்வாயன்று காலை வாலிபர் ஒருவர் கழுத்தில் கயிறுடன் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான விசாரணையில் அவர் திருப்பூர் பூலுவபட்டி பழனிசாமி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. மேலும், இவர் அப்பகுதியில் இரவு மதுபான கடையில் இரண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்து மது வாங்கிய பின், மீதி பணம் வாங்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதன்பின் செவ்வாயன்று காலை மதுபான கடைகாரரிடம் மீதி பணத்தை கேட்டபோது இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர மதுபோதையில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மேல் இருந்த செல்வராஜிடம் சமாதானம் பேசி தீயணைப்பு வீரர்கள் மூலம் மின்கோபுரத்தில் இருந்து பாதுகாப்பாக இறக்கினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: