இருளர் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் குடிமனைபட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள காஞ்சிப்பாடி, தாலவேடு, நெமிலி,தாழவேடு ஆகிய இருளர் காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா,சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், திருத்தணி பகுதிக்கு உட்பட தாடூர், எல்.என். கண்டிகை, கார்த்திகாபுரம்,கங்கா நகர்,செருக்கனூர் பங்களாமேடு, அவூர், ஆகிய கிராமங்களில் வாழும் 250 இருளர் இன குடும்பங்களுக்கு குடிமனை பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மனு கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஒ விடம் மனு அளித்தார்.மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாச்சியர் ஜெயராமன் அடுத்த ஒரு மாதத்தில் குடிமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் சி.பெருமாள், மாவட்டத் துணைத் தலைவர் எஸ். குமாரவேல், விவசாயிகள் சங்கத்தின் பகுதி தலைவர் அப்சல் அகமது, சிஐடியு நிர்வாகி சம்மந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.