அமிர்தசரஸ்
மோசடி குற்றச்சாட்டில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர் எஸ் எஸ் அமைப்பின் பஞ்சாப் பகுதியின் துணைத்தலைவராக பதவி வகித்தவர் ரஜனீஷ் அரோரா.   கடந்த 2008ஆம் வருடம் இவர் டில்லி ஐஐடி மூலமாக ஜலந்தரில் உள்ள பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக் கழக துணை வேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு வரை பஞ்சாப் ஆர் எஸ் எஸ் பிரிவின் துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார்.   அதனால் இவர் துணை வேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆர் எஸ் எஸ் பின்னணியே காரணம் என அப்போது ஒரு செய்தி உலவி வந்தது.
இவர் தனது பதவிக் காலத்தில் பல சேவைகளுக்கு உதவ ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமித்துள்ளார்.  இந்த நிறுவனத்துக்கு ரூ. 25 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.   அது மட்டுமின்றி தனக்கு வேண்டிய 25 நபர்களை தகுதி இல்லாமல் பல்கலைக்கழக பணிகளில் அமர்த்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.   இது தவிர பல புதிய பாடத் திட்டங்களை தொடங்கி அதில் மாணவர்களே சேராத நிலையில் அங்கும் பல ஆசிரியர்களை நியமித்துள்ளார்.
இது குறித்து அரோரா மீதும் அவருடைய உதவியாளர்கள் மீதும் மோசடி, பொதுப் பணத்தை முறையற்ற வகையில் செலவழித்தல்,   ஊழல் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.   அதை ஒட்டி ரஜனீஷ் அரோரா அமிர்தசரஸில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   அவரிடம்  நான்கு நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டதை ஒட்டி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.