சேலம் மாவட்டம், காடை
யம்பட்டி தாலுகா பண்ணபட்டி கிராம ஊராட்சியில் மாரகவுண்டன்புதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஐநூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதி மக்களுக்கு பண்ணபட்டியில் இருந்து பைப்லைன் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், முறையாக குடி தண்ணீர் விநியோகிகப்படாததால் கிராம மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். அதனால், தங்கள் பகுதிக்கு என்று தனியாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டிக் கொடுத்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாய் திட்டத்தின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கடந்த 2015-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும், தண்ணீர் தொட்டி கட்டியதும் அதற்காக தனியாக ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டு தண்ணீர் ஏற்றுவதற்கான அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி நிரப்பப்பட்டது.

ஆனால், தரமற்ற முறையில் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை கட்டியதால் தொட்டியில் இருந்து ஆங்காங்கே தண்ணீர் கசிந்து கீழே வழிந்தோடியது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதன்பின் தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் நிறுத்தினர். சுமார் இரண்டாண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும், இதுவரை இந்த மேல்நிலை தண்ணீர் தொட்டியானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அரசு பணம் ரூ.5 லட்சம் விரயமாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் அலட்சியத்தால், ஒப்பந்ததாரர்கள் தரமின்றி தண்ணீர் தொட்டியை கட்டி கொள்ளை லாபம் அடித்து சென்றுவிட்டனர். இதன்பின்னரும் நடவடிக்கை எடுக்க வேண்டியஅதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால் தற்போது வரை அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், அவருக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகத்திற்கு உரிய தீர்வு காண வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-எழில், சேலம்.

Leave a Reply

You must be logged in to post a comment.