சேலம், ஜன.10-
சாக்கடை, குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தித்தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஆவின் பால்பண்ணை பகுதியில் சத்யா நகர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. அதுவும், சாக்கடை வசதி இல்லாததால் கிராமத்தின் கழிவு முழுவதும் சாலையிலேயே தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பொது குடிநீர் குழாய்களை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த கழிவு நீருடனேயே குடிநீரை பிடித்து செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகளுக்கும், உடல் ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்பட்டுள்ளது.  மேலும், வீட்டுமனை பட்டா, சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்
றனர். இந்த பிரச்சனைகளை தீர்த்துவைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் புதனன்று அந்த கிராமத்தின் வழியாக சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் காரை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். பின்னர், தங்களது பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக சுட்டிகாட்டினர். மேலும், இந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்து தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். இதையடுத்து இந்த பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை கண்டறிந்து அவற்றை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார். மேலும், அதிகாரிகளிடம் அந்த பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.