நீலகிரி, ஜன.9-
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் 122-வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடக்கி வைத்தார்.

இதன்பின் அவர் பேசுகையில், பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல வண்ண மலர் செடிகளைக் கொண்டு மலர் பாத்திகளை அமைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக நீண்ட வாழ்நாட்களைக் கொண்ட சாலிவியா டெல்பீனியம் மற்றும் பென்ஸ்டிமன் போன்ற மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளது. இவ்வாண்டு சிறப்பு அம்சமாக 230 வகையான பல புதிய ரக மலர் செடிகளுக்கான விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ளது.

இதன்மூலம் மலர்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் சுமார் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தும்மனட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட 15 ரக கார்னேசன் மலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவர மலர் காட்சி அரங்கினுள் 15 ஆயிரம் பல வண்ண மலர் செடிகள் அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.