======எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்=====
தொழில்நுட்ப உலகைப் பொறுத்தவரை 2017ஆம் ஆண்டு பல முக்கிய நிகழ்வுகளைக் கடந்து வந்திருக்கிறது.நல்லது தீயது என்ற இரண்டு முனைகளிலும் ஊசலாட்டமாகவே சென்ற ஆண்டின் நிகழ்வுகள் அமைந்தன என்று குறிப்பிடலாம்.

அதிரவைத்த வைரஸ் தாக்குதல்
முந்தைய 2016ஆம் ஆண்டைவிட 2017ஆம் ஆண்டில் தீங்கிழைக்கும் வைரஸ் நிரல்களின் தாக்குதல் நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. 2016இல் 1050 தாக்குல்கள், 2017இல் 1985 தாக்குதல்கள் நடைபெற்றதாக ஒரு கணக்கீடு சொல்கிறது. மால்வேர், ஆட்வேர், பாட்வேர், ரான்சம்வேர் எனப் பல பெயர்களில் பல வடிவங்களில் புதிது புதிதாக உருவாகிவரும் வைரஸ்களால் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது கணினித் துறை.பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் உள்பட 150 நாடுகளின் 3 லட்சம் கணினிகளை இந்த ரேன்சம்வேர் தாக்கியது. இத்தாக்குதலால் கணினிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. கணினிகளை பணயக் கைதியாக்கி பணம் பறிக்கும் யுக்தி உலக அளவில் நடைபெற்றது.

சென்ற ஆண்டின் மிக மோசமான இணையத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. உலகப் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் வடகொரியாதான் என சொல்லும் அமெரிக்கா, இந்த பிரச்சனையிலும் வடகொரியாவை நோக்கி கையை நீட்டியது.இந்த வைரஸ் தாக்குதலுக்கு முன்பாகவே கடந்த மார்ச் மாதத்தில் ரிவர் சிட்டி மீடியா என்ற ஸ்பேம் இமெயில் நிறுவனத்தின் 1.34 பில்லியன் மின்னஞ்சல் கணக்கு விபரங்கள் கசிந்தன. அதே போல பிரபல வாடகைக் கார் நிறுவனமான உபேர் (Uber) நிறுவனத்தின் 57 மில்லியன் வாடிக்கையாளர் விபரங்கள் களவாடப்பட்ட செய்தியும் வெளியானது.

கடந்த செப்டம்பரில் அமெரிக்காவைச் சேர்ந்த Ezuifax என்ற நிதிசார் நிறுவனம் மிகப்பெரிய அளவிலான பயனர் தகவல் பதிவுகளை இழந்தது.

கிரிப்டோ கரன்சி
மெய்நிகர் பணம் என்றழைக்கப்படும் கிரிப்ட்டோ கரன்சிகள் பரவலான விவாதப் பொருளாக மாறியிருக்கின்றன. பல பெயர்களில் கிரிப்டோ கரன்சிகள் இருந்தாலும் பிட்காயின்தான் இன்றைய நிலையில் பெரும் மதிப்பு மிக்கதாக விளங்குகிறது. முந்தைய ஆண்டில் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் இருந்த பிட்காயின்கள் 2017ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் பதினைந்தாயிரம் டாலர் என்ற உயரத்தை எட்டிப் பிடித்தது.பிட்காயினின் இத்தகைய புகழுக்குக் காரணம் ரான்சம்வேர் வைரஸால் கிடைத்த இலவச விளம்பரமா அல்லது இதன் நிச்சயமற்ற தன்மை காரணமாக, பிட்காயினின் மதிப்பு எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சியடையலாம் என்ற பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையையும் மீறி முதலீடு செய்பவர்கள் கறுப்புப் பண முதலீட்டாளர்களா என்ற பெரும்பான்மை கருத்தும் கவனிக்கத்தக்கது. எப்படியாயினும் பிட்காயின் போன்ற டிஜிட்டல் வடிவிலான கிரிப்டோ கரன்ஸிக்களின் வருகை வங்கிகளுக்கு கடும் சவால்தான்.

ஆப்பிள் ஐபோன்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 10ஆம் ஆண்டைக் கொண்டாடும் தருணத்தில் புதிய ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. சென்ற ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எக்ஸ் வருகை ஓரளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்று குறிப்பிடலாம். ஐஃபோன் X -ல் கைரேகை மூலம் உரிமையாளரை கண்டறியும் ஃபிங்கர் பிரிண்ட் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, முகத்தை ஸ்கேன் செய்து கண்டறியும் புதிய நுட்பம் அறிமுகமானது. ஐபோன் புதிய அறிமுகம் இருந்து நிலையில் பழைய மாடல்களில் வேகம் குறைவு என்ற பிரச்சனை அதிகமாக கூறப்பட்டது. இதற்குக் காரணம் ஐபோனில் பயன்படுத்தப்பட்டிருந்த லித்தியம் அயன் பேட்டரிகள் பழையதாகிவிட்டது என்பதுதான். குறிப்பாக 4 ஆண்டுகளுக்கு மேலான ஐபோன்களில் பேட்டரிகள்தான் பெரும் பிரச்சனையாக உள்ளன. எனவே, முந்தைய ஐபோன் பயனர்கள் புதிய பேட்டரியை வாங்குவது நல்லது.

மீண்டு(ம்) வந்த நோக்கியா
ஸ்மார்ட்போன் வணிகத்தில் கடும் போட்டி நிலவும் சூழலில் தன் பெயரை மட்டுமே நம்பி மீண்டும் ஒரு முறை களத்திற்கு வந்திருக்கிறது நோக்கியா நிறுவனம். இந்தியாவில் இதனை எச்எம்டி க்ளோபல் (HMT Global) நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. 2017-ஆம் ஆண்டு மே மாதத்தில் நோக்கியாவின் புகழ்பெற்ற மாடலான 3310 வகை அலைபேசி புதிய அம்சங்களுடன் மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின்பும் அதன் மறு அறிமுகம் டெக் உலகில் அதிகம் பேசவைத்தது. நோக்கியாவின் டிரேட்மார்க்கான பாம்பு விளையாட்டு இதிலும் இடம்பெற்றது. 2ஜி தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட இந்த போனில் ஸ்னாப் சாட், வாட்ஸ் ஆப் செயலிகளைப் பயன்படுத்துவதில் பயனருக்கு பல சிரமங்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.

ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் நோக்கியா 1, நோக்கியா 4, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 9 என பல மாடல்கள் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேட்டா வழங்குவதில் போட்டா போட்டி
2016ல் அறிமுகமான ரிலையன்ஸ் குடும்பத்தின் ஜியோ 4ஜி அலைவரிசை சேவையை அனைவரது தலையிலும் கட்டவேண்டும் என்ற ஒரே கொள்கையில் தினமும் ஒரு ஜிபி டேட்டாவும் அளவற்ற கால்களும் இலவசம் என்ற வலையை விரித்தது. 6 மாதத்திற்கும் மேல் நீடித்த இலவசச் சலுகை கடந்த 2017 மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்து கட்டணத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.அதற்குள்ளாக போட்டியாளர்களாக இருந்த ஏர்டெல், வோடாபோன், ஏர்செல், ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்காவிட்டாலும், உடனடியாக ஜியோவிற்கு போட்டியாக அதனை விட ஒரு படிமேலான சலுகைகளை உடனுக்குடன் வழங்கி தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. இந்த டேட்டா யுத்தத்தில் உலக அளவில் பயன்படுத்தப்படும் இன்டெர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.

Leave A Reply

%d bloggers like this: