தகவல் தொழில்நுட்பம் (ஐடி), தகவல் தொழில்நுட்ப சார்பு தொழில் களில் (ஐடிஇஎஸ்) பணியாற்றுகிறவர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியமாக 26 ஆயிரம் ரூபாயும், பஞ்சபடியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

யூனியன் ஆப் ஐடி மற்றும் ஐடிஈஎஸ் ஊழியர்கள் சங்கத்தின் (யுனைட்) சிறப்புக்கூட்டம் ஞாயிறன்று (ஜன.7) துரைப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில், இன்றைய ஐடி துறை மற்றும் ஐடி சார்பு தொழில் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதை எதிர் கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து விளக்கினார்.மத்திய மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையினால் ஐடி துறை வளர்கிறது.

அதேநேரத்தில் அந்த நிறுவனங்களுக்கு அதீத லாபத்தை ஈட்டித் தரும் ஊழியர்களின் வேலைப் பளு மற்றும் ஊதிய சமத்துவமின்மை தொடர்கிறது என்று கூறிய அரிபரந்தாமன், ஐடி துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் அனைத்தும் இணைந்து ஊழியர் சார்பு கொள்கையை அமல்படுத்திட வேண்டும். ஐடி நிறுவனங்களுக் கென்று ஓர் சங்கம் உள்ளது. ஆனால் ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக ஒரு சங்கத்தை உருவாக்க நினைத்தால் பழிவாங்கலுக்கு உள்ளாகின்றனர். இதனை முறியடிக்கத் தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்ந்து தங்களது உரிமைகளையும், நலன்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், ஐடி, ஐடிஇஎஸ் துறைகளில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு அதிகமாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகை ஊதியம் வழங்க வேண்டும், பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கவும், பெண் ஊழியர் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும், பணியிடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்த வேண்டும், இந்திய தொழிலாளர் சட்டங் களை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் ஐடி கொள்கையை வடிவமைக்கும் போது தொழிற்சங்கங் களை அழைத்துப் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவர் பரணிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தென் மண்டல காப்பீட்டு சங்க கூட்டமைப்பு துணைத்தலைவர் கே.சுவாமிநாதன், சமூக ஆர்வலர் ஆறுமுக நயினார், கர்நாடக மாநில செயலாளர் வினித்வாகில், சங்கத்தின் கவுரவ தலைவர் எஸ்.கண்ணன், துணைத் தலைவர்கள் கே.சி.கோபிகுமார், ஆர்.சுகுமார், துணை செயலாளர் கள் அ.இளங்கோ. சீத்தாராமன், பொருளாளர் சி.சுமேதா, கமிட்டி உறுப்பினர்கள் அகமத், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்வை பாரதி ஒருங்கிணைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: