கோவையில் உள்ள கதிர்நாயக்கன்பாளையம் என்னும் பகுதியில் மத்திய அரசின் சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு துணை ராணுவம் என்றழைக்கபடும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தேர்வாகும் கமாண்டோ வீரர்கள் முதல் அதிகாரிகள் வரை பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு நவீன துப்பாக்கிகளை கையாளுதல், அடர்ந்த காடுகளில் மறைந்திருக்கும் எதிரிகளை மீது கொரில்லா முறை தாக்குதல் நடத்துவது, தங்கள் மீது திடீரென நடத்தப்படும் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பி எதிரிகள் மீது துப்பாக்கியால் சுடுவது,பாதுகாப்பான இடத்தில் பதுங்கியபடி தொலைவில் உள்ளவர்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்துவது, கையெறிகுண்டுகளை வீசுவது. அடர்ந்த காட்டுக்குள் இரவின் இருளில் பதுங்கியிருக்கும் எதிரிகளை கண்டறிய 500 அடி உயரத்தில் அதிக நேரம் ஒளிபாய்ச்சும் ஒரு வித நவீன பட்டாசை ஒளிர செய்து குறிப்பிட்ட நொடிகளில் இலக்கை நோக்கி சுடுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கபடுகின்றன.

ஆண்டுதோறும் இங்கு பயிற்சி நிறைவு செய்யும் வீரர்கள், நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவும் காஷ்மீர் எல்லை பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இப்பயிற்சிகளை பெற மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எப் கல்லூரியில் ஆயிரம் ஏக்கரில் மிகப்பெரிய வீரர்கள் வளாகம் உள்ளது. வனத்தை யொட்டியுள்ள இங்கு வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்க அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் போதாதென்று மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு மேலே உள்ள அடர்ந்த வனப்பகுதியான பாலமலைக் காட்டில் மாதகணக்கில் முகாமிட்டு இரவு ,பகலாக கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் சப்தத்தால் மலைக்காடே அதிர, இங்கு பாரம்பரியமாக இயற்கையோடு இணைந்து அமைதியாய் வாழ்க்கை நடத்தி வரும் பழங்குடியின மக்கள் பெரும் அச்சத்திலும் திகைப்பிலும் ஆழ்ந்துள்ளனர்.

நடு இரவிலும் துப்பாக்கிகளோடு வீரர்கள் காட்டுகளுக்குள் சுற்றுவதால் இங்குள்ள பெரும்பதி, பெருக்கைப்பதி, மாங்குழி, பசுமணி, குஞ்சூர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் செய்வதறியாமல் கலக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். கடும் பனிக்காலத்தில் காடுகளில் தங்கியிருந்து எதிரிகளை வீழ்த்துவது குறித்த பயிற்சி என கூறப்பட்டாலும், இப்பயிற்சிகளால் இயற்கை காட்டின் அமைதியான சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கந்தக நெடியால் வனமே மாசடைந்து விட்டது என இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், தொடர்ச்சியான மனித நடமாட்டமும், வெடி சப்தமும் இங்கு சுற்றித்திரியும் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை மிரட்சியடைய வைப்பதால் அவை காட்டை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.

யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற ஆபத்தான வனவிலங்குகள் நடமாடும் பகுதியான இங்கு வேறு யாரும் நுழைய அனுமதியில்லை, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை இவ்வனத்தை ஒட்டியுள்ள சாலையில் கூட எடுத்து செல்லக்கூடாது, மீறினால் வனச்சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள் என பாலமலைப் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புகளையும் வனத்துறையினர் வைத்துள்ளனர். அதேநேரம், இப்பயிற்சி நடக்க மட்டும் அனுமதியளித்து உள்ளதா எனக்கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதியினர். மேலும், காட்டில் இருந்த சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் எல்லாம் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் வருவதால் அவை தங்களது ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தாக்குகின்றன. யானைகளால் பயிர்கள் சேதமடைவதொடு அவை
தங்களது வீடுகளையும் உடைத்தெறிகின்றன என வேதனை தெரிவிக்கின்றனர் மலைக்கிராம மக்கள்.உள்நாட்டு பாதுகாப்பிற்கு பயிற்சி பெறும் வீரர்கள் காட்டை வாழ்விடமாக கொண்ட வன உயிரினங்களின் பாதுகாப்பு, வனசூழல் பாதுகாப்பு, வனத்தை வாழ்வாதாரமாக கொண்டு காலம் காலமாக மலைக்காட்டில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு, விவசாய பயிர்கள் மற்றும் மனித உயிர்களின் பாதுகாப்பு என அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற பயிற்சிகளை பல்லுயிர் பெருக்க காடுகளில் மேற்க்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்பாக உள்ளது.

இரா.சரவணபாபு, மேட்டுப்பாளையம்.

Leave a Reply

You must be logged in to post a comment.