=====ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்=====
தமிழக அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்குகின்றன. அநேகமாக, அனைத்து கிராமங்களுக்கும்கூட இப்பேருந்துகள் செல்கின்றன. இதில் பயணிகளின் நலனுக்காக பேருந்துகள் இயக்கப்படுகின்றனவே அன்றி இலாப நோக்கத்திற்காக அல்ல. மாணவர்களுக்கு, மாற்றுதிறனாளிகளுக்கு, முதியோருக்கு பயண கட்டணத்தில் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.

இதனால் நட்டம் தான் ஏற்படும். ஆனால் மக்கள் நலனுக்காக அரசு பேருந்துகளை அரசு இயக்குகிறது. எனவே போக்குவரத்து கழககங்களுக்கு ஏற்படும் நட்டத்திற்கு அரசு நிதி உதவி செய்யவேண்டும். தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது இலாப நோக்கத்திற்காக மட்டுமே.
இதுபோன்ற ஒரு சேவை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கிடையாது. சுமார் 1,50,000 தொழிலாளர்கள் இக்கழகங்களில் பணிபுரிகின்றனர்.

குறிப்பாக, 2015 – ஆம் ஆண்டில் கடும் வெள்ளம் வந்தபோது தனியார் பேருந்துகள் அதன் இயக்கத்தை நிறுத்திவிட்டன. பேருந்துக்கு இழப்பு ஏற்படும் என்பதே காரணம். ஆனால் மேற்சொன்ன அரசு பேருந்துகள் வெள்ள பகுதிகளிலும் இயக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவி செய்ததை அனைவரும் அறிவர். இப்படி செய்த பணிக்காக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். தமிழக அரசும் பாராட்டுக்குரியதே.அதேபோல, 2016 – ஆம் ஆண்டு வர்தா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டபோதும், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கினார்கள். அவர்களின் சேவை பாராட்டுக்குரியது. தமிழக அரசும் பாராட்டுக்குரியதே.

கையாடல் என்ற குற்றச்செயல்
ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடும் அநீதியை அரசும், போக்குவரத்துக்கு கழகங்களும் இழைக்கின்றன. தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்புநிதி (PF) கோடிக்கணக்கில் நிதியத்தில் செலுத்தவில்லை. அதேபோல ஆயுள் காப்பீட்டு கழகத்திற்காக (LIC) சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்டும் அக்கழகத்திற்கு செலுத்தவில்லை. இவ்விதம் செலுத்தப்படாத தொகை ருபாய் 6,000 (ஆறாயிரம்) கோடிக்கும் மேல்.இதனால், தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களின் பணத்தில் இருந்து கல்விக்காக, திருமணத்திற்காக, மருத்துவ செலவிற்காக கடன் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சம்பளத்தில் பிடித்தபின் செலுத்தாமல் இருப்பது ஒரு குற்ற செயல் ஆகும். அதாவது அது ஒரு மோசடியான கையாடல் ஆகும். ருபாய் 2- க்கு பயண சீட்டு தரவில்லை என்றும் அந்த ருபாய் 2 கையாடல் செய்ததாகவும் நூற்றுக்கணக்கில் – ஏன் ஆயிரக்கணக்கில் – நடத்துனரை வேலைநீக்கம் செய்கிறது இந்த போக்குவரத்து கழகங்கள். இந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கின்றன. 6,000 கோடிக்கும் மேல் கையாடல் செய்த நிர்வாகத்திற்கு எந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது?

நான் வழக்குரைஞராக இருந்தபோது, இது போல் கோடிக்கணக்கில் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்த பணம் உரிய நிதியத்தில் செலுத்தப்பட வில்லை என்றும், இது கையாடல் என்ற குற்றச்செயல் என்றும் தொழிற் சங்கத்தின் சார்பாக வழக்கு போட்டுள்ளேன். அப்போதெல்லாம் போக்குவரத்து கழகங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறுவதை ஏற்று அக்கழகங்களுக்கு தவணை முறையில் செலுத்த உயர் நீதிதிமன்றம் சலுகை காண்பித்து உத்தரவிடும். அந்த சலுகையைக்கூட மதிக்காமல் உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவின்படி தவணை தொகைகளை செலுத்துவதில்லை.இதற்காக நீதிமன்ற அவதூறு வழக்கை போடும்போதும் போக்குவரத்து கழகங்களின் எந்த உயர் அதிகாரியும் சிறைக்கு சென்றதில்லை.ஆனால், சொற்ப தொகைக்கான பயண சீட்டு அளிக்காமல் நடத்துனர் கையாடல் செய்தார் என்ற வழக்குகளில், இந்த தொழிலாளர்களின் வேலை நீக்கம் சரி என்றே நீதிதிமன்றங்கள் கூறுகிறது. பொது பணத்தை கையாடல் செய்ததாக குற்றசாட்டு எழும்போது கையாடல் செய்த தொகை சொற்பமானதா – அதிகமானதா என்றெல்லாம் பார்க்கக்கூடாது என்று நீதிமன்றம் நியாயம் பேசுகிறது.

இந்த நாட்டில் ரூ.1000 கோடிக்குமேல் வங்கியில் பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாமல் ஓட்டம் பிடித்த விஜய் மல்லையாக்களும் லலித் மோடிகளும் வெளிநாட்டில் வசதியுடன் வாழ்கின்றனர். லலித் மோடியின் மனைவிக்கு உடல்நலக் குறைவு என்றபோது வெளிநாட்டு மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவி செய்வார்.

பணி ஓய்வு பெற்றபின் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பலன்கள் பல ஆண்டுகள் ஆனாலும் வழங்கப்படவில்லை. இது சட்ட விரோதமானது. இதுவும் ஒரு கையாடல் வகையை சேர்ந்ததே. இந்த தொழிலாளர்கள் உயர்நீதி மன்றம் சென்று வழக்கு போட நிர்பந்திக்கப்படுகிறார்கள். வழக்கு போடும்போது உயர்நீதிமன்றம் தவணை முறையில் ஓய்வூதியத்தை அளிக்குமாறு கூறி உத்தரவு போடுகிறது. இங்கும் இந்த போக்குவரத்து கழகங்களுக்கு இப்படி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த தவணை தொகையும் நீதிமன்ற உத்தரவுப்படி கொடுப்பதில்லை.ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து ஓய்வூதிய பலன்கள் கேட்கும்போது, உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு பொதுநல வழக்கை பதிவு செய்து, அரசு ஓய்வூதிய பலன்களை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வழக்கிற்காக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.

மேலும் ஜூன் 2017 – க்கு பின்னர் ஓய்வுபெற்ற சுமார் 3000 தொழிலாளர்களின் ஓய்வூதிய தொகை இன்று வரை அளிக்கப்பட்டவில்லை. இது சுமார் ருபாய் 400 கோடியாகும்.

கார் ஓட்டுநருக்கும் கீழான ஊதியம்
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியம், தொழில் தகராறு சட்டத்தின் கீழ் போடப்படும் ஒப்பந்தங்களால் தீர்மானிக்கப்படுகிறது. இறுதியாக போட்ட ஒப்பந்தம் 31.08.2016 அன்று முடிவுக்கு வந்தது. அதற்கு பின் புதிய ஒப்பந்தம் போட்டு ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும்.ஒப்பந்தம் காலாவதியானதும் தொழிற் சங்கங்கள் ஊதிய உயர்வு சம்மந்தமான கோரிக்கைளை உடனே சமர்ப்பித்தன. அதில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கும், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கும் வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் கனரக வாகனமான பேருந்தை ஓட்டுபவர்கள். இவர்களுக்கு அரசின் கீழ் பணிபுரியும் இலகுரக வாகனமான மகிழுந்தை (car) ஓட்டும் ஓட்டுநர்களுக்கான ஊதியத்தை விட குறைவாக தரப்படுகிறது.

ஓய்வூதிய பலன்களையும் ஓய்வூதியத்தையும் போக்குவரத்து கழகங்கள் கோடிக்கணக்கில் கொடுக்காமல் இருப்பதால் ஓய்வூதியம் தரும் பொறுப்பை அரசே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 01.04.2003 பின்னர் சேரும் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க கோரப்பட்டது. கோடிக்கணக்கில் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்த பணத்தை உடனே செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலார்களுக்கு உடனே ஓய்வூதிய பலன்கள் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த கோரிக்கைள் சம்மந்தமாக புதிய ஒப்பந்தம் ஏற்படுவதற்காக அரசும், கழக நிர்வாகமும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஒவ்வொரு ஒப்பந்தம் ஏற்படும்போதும் போக்குவரத்து அமைச்சர் அதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார். இறுதியில் ஏற்படும் ஒப்பந்தம் தமிழக அரசின் தொழிலாளர் இலாக்காவின் சமரச அதிகாரியின் முன் கையெழுத்தாகும். இந்த சமரச அதிகாரி தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சமரச அதிகாரி ஆவார். இந்த சமரச அதிகாரி முன் ஏற்படும் ஒப்பந்தம் அனைத்து தொழிலாளர்களையும் கட்டுப்படுத்தும்.புதிய ஒப்பந்தம் சம்பந்தமாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் 15.05.2017 அன்று புதிய ஒப்பந்தம் காண வேண்டி வேலை நிறுத்தம் தொடங்கினர். உடனே மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. போக்குவரத்து கழக தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் எனவே வேலை நிறுத்தத்தை தடை செய்யுமாறும் அந்த வழக்கில் கோரப்பட்டது. நீதிமன்றமும் தடை வழங்கியது. சம்மந்தப்பட்ட தொழிற் சங்கங்களை கேட்காமலே ஒருதலைப் பட்சமாக (exparte) தடை உத்தரவு வழங்கப்பட்டது.

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்ததை ஒட்டி 16.05.2017 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் மூன்று மாதத்திற்குள் பிரச்சனைகளை பேசி தீர்த்து ஒப்பந்தம் காண்பது என்று முடிவானது. அதில் அரசு ரூபாய் 500 கோடி நிதியை உடனடியாக அளித்தது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை செப்டம்பர் 2017 – க்குள் கொடுப்பதாக அரசு ஒப்புக்கொண்டது. எனவே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை விலக்கி கொண்டனர்.

உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியுமா?
பணி நிலைமை சம்மந்தமான விஷயங்களில் (service matters) பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2000 ற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தபோது, புதிய தமிழகத்தின் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் தாழ்த்தப்பட்டோர்களுக்கான பல வருடங்களாக நிரப்படப்படாத இடங்களை (Backlog vacancies) நிரப்பியபின்தான் மீதி இடங்கள் நிரப்படவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.இதை விசாரித்த நீதிபதி திரு. முகோபாத்தியாய அவர்களின் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது. பணி சம்மந்தமான விவகாரங்களில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற சட்ட நிலைமையை கூறி தள்ளுபடி செய்தது.

அப்படி என்றால், தொழிலார்களோ / ஊழியர்களோ வேலை நிறுத்தம் செய்வது சம்மந்தமாக பொது நல வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா?

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் / ஊழியர்கள் சம்மந்தமாக சம்மந்தப்பட்ட முதலாளிகள் / நிர்வாகம் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளட்டும். தொழிலாளர்களுக்கும் நிர்வாகங்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள், தாவாக்கள் வேலை நிறுத்தமாகவோ, கதைவடைப்பாகவோ முடிவடையும் நேரங்களில் சம்மந்தப்பட்ட தரப்பினர் தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் தேடிக்கொள்வார்கள்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானதெனில் அவர்களை சம்மந்தப்பட்ட நிர்வாகம் (இங்கு போக்குவரத்து கழகங்கள்) வேலைநீக்கம் கூட செய்யட்டும். அதை தொழிலாளர்கள் எதிர்கொள்வர். அந்த வேலை நீக்கத்தை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கையை தொழிலாளர்கள் மேற்கொள்வர். உரிய நீதிமன்றத்தை அணுகுவர். அப்போது நீதிமன்றம் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை செய்யட்டும்.

அத்தியாவசிய பணி பராமரிப்பு சட்டம் இருக்கிறது. அதன் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கட்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்த சட்டத்தை பயன்படுத்தி போராடிய அரசு ஊழியர்கள் சுமார் 2,00,000 பேரை உடனே பணி நீக்கம் செய்தார். பின்னர் அவர்களுக்கு வேலை நீக்க காலத்திற்கும், வேலை நிறுத்த காலத்திற்கும் முழு ஊதியத்தையும் மீண்டும் பணிதொடர்ச்சியுடன் வேலையும் அளித்தார்.நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகம் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. நான் நீதிபதியாக இருந்த போது அந்த வழக்கு என் முன் விசாரணைக்கு வந்தது. அதில் தொழிலாளர்கள் சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகவும் அதற்கு தடை அளிக்குமாறும் கேட்டது. பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி திரு.சந்துரு அவர்களின் தீர்ப்பை சுட்டி காண்பித்து, இதே போன்ற நிலைமையில் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் என்றேன். பார்த் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் , அவர்களின் தொழிலார்கள் சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறி அதற்கு தடை கோரி வழக்கு போட்டனர். நீதிபதி திரு.சந்துரு முன்பு அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அதில் விரிவான தீர்ப்பை அவர் அளித்துள்ளார். அதில் அவர் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் மேற்கோள் காட்டியுள்ளார். சட்ட விரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் தொழிலாளர்களின் மேல் நிர்வாகம் சட்டப்படி எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றார். ஆனால் நிர்வாகம் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படும்படி உயர் நீதிமன்றத்தை துணைக்கு அழைக்க முடியாது என்றார். நீதிமன்றம் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் நடுநிலையாக இருக்கும் என்றார். தொழிலாளர்களின் கூட்டு பேர சக்தியை முறியடிப்பதற்கு நீதிமன்றத்தின் துணையை நிர்வாகம் நாடமுடியாது என்றார்.

நெய்வேலியில் நடந்தது என்ன?
நான் இதை சுட்டி காண்பித்து, நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகம் போட்ட வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்றாலும், வழக்கில் கட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்சங்களுக்கு நிர்வாகம் அறிவிப்பு அளிக்கும்படி கூறி வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தேன். வேலை நிறுத்தத்திற்கு தடை கொடுக்க மறுத்தேன். இரு வாரம் கழித்து நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களின் வாதங்ககளை கேட்டு முடிவெடுப்பதாக கூறி உரிய உத்தரவு போட்டேன்.அதற்கு மேல் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகம் இரு நீதிபதிகள் அமர்வு முன் மேல்முறையீடு செய்தது. அடுத்த நாளே மேல்முறையீட்டில் இரு நீதிபதிகள் அமர்வு மூலம் வேலை நிறுத்தத்திற்கு தடை உத்தரவு பெற்றது. ஆனால் தொழிலாளர்கள் தடை உத்தரவையும் மீறி போராட்டதை தொடர்ந்தனர். சுமார் 3 வாரங்கள் போராட்டம் நடந்ததும் நிர்வாகம் போராடிய தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு பிரச்சனைக்கு முடிவு கண்டது. எனவே இரு நீதிபதிகள் அமர்வின் தடை உத்தரவிற்கு ஏற்பட்ட நிலை என்ன? போராடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தார்கள் என்று கூறி சிறைக்கு அனுப்ப முடியுமா? எனவே திரு. சந்துரு அவர்களின் தீர்ப்பே சரியானது என்று நான் கருதுகிறேன்.

தொழிலாளர்களை கேட்காமலே தடையா?
ஆனால், இப்பொழுது போக்குவரத்து கழக தொழிலாளர்களின் சங்கங்களை கேட்காமலே உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு 04.01.2018 முதல் போராடும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது.ஏன் இந்த போராட்டம்? ‘‘16.05.2017 தேதிய புரிந்துணர்வு ஒப்பந்தப்படி அரசும் போக்குவரத்து கழகங்களும் செயல்படவில்லை. எனவே, தொழிலாளர்களின் சங்கங்கள் 09.09.2017 அன்று இரு வாரங்களுக்கு பின்னர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு கொடுத்தன. இதனடிப்படியில் தொழிலாளர் இலாக்காவின் சமரச அதிகாரி 19.09.2017 அன்று போக்குவரத்து கழகங்களையும் தொழிற்சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வேலை நிறுத்தத்தை தவிர்க்க சொன்னார். போக்குவரத்து மந்திரியும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார். எனவே வேலை நிறுத்தம் நடைபெறவில்லை.

27.09.2017 அன்று போக்குவரத்து மந்திரிக்கும், தொழிற்சங்கங்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. இடைக்கால நிவாரணமாக ரூபாய் 1200 கொடுப்பதற்கும் ஒவ்வொரு பேச்சுவார்த்தையின்போதும் ஒரு உப குழு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வந்து இறுதியில் ஒப்பந்தம் ஏற்படுவதுபோல் உப குழு அமைத்து அதனுடன் பேச முடிவானது. உப குழுவுடன் பலப் பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தொழிற்சங்கங்கள், அரசு ஓட்டுநருக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தின. இறுதியில் அதற்கு மாற்றாக மூன்றால் பெருக்கிவரும் (Multiplier) தொகையை அளிக்குமாறு கேட்டது. நிர்வாகம் 2.44 – னால் பெருக்கி வருகின்ற தொகை அளிக்க ஒப்புக்கொண்டது. தொழிலாளர்கள் மூன்றுக்கு பதிலாக 2.87 க்கு இறங்கி வந்து இறுதியில் 2.57 – ஆல் பெருக்கி வரும் தொகையை அளித்தால் ஒப்புக்கொள்வதாக கூறினர்.

துரோக ஒப்பந்தம்
இந்நிலையில் 03.01.2018 அன்று பல்லவன் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மேற்சொன்ன அளவிற்கு நிலைமை இருந்தபோது அன்று தொழிலாளர் இலாக்காவின் சமரச அதிகாரி பல்லவன் இல்லத்திற்கு அரசால் அழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் 2.44 பெருக்கல் தொகை சம்மந்தமான ஒப்பந்தம் அ.தி.மு.க தொழிற் சங்கத்துடனும் சில தொழிற் சங்கங்களுடனும் கையெழுத்தானது. மிக பெரும்பான்மையான தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட தொழிற்சங்கங்கள் புறக்கணிக்கப்பட்டன.

எது சட்ட விரோதம்?
தொழிலாளர் இலாக்காவின் சமரச அதிகாரி, அதிமுக அரசின் சொல்படி இயங்குபவராக மாறினார். சமரச அதிகாரி சமரச பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை. 03.01.2018 அன்று சமரச பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஏதும் கூறவில்லை. அதற்கான அறிவிப்பு அனுப்பவில்லை. அப்படியே நடந்தாலும் அது தொழிலாளர் இலாக்காவின் அலுவலகத்தில் அல்லவா நடைபெறவேண்டும்? சமரச அதிகாரி முன் போடப்பட்ட ஒப்பந்தம் அனைத்து தொழிலாளர்களையும் கட்டுப்படுத்தும். எனவே, சட்ட விரோதமான, ஜனநாயாக விரோதமான தமிழக அரசின் இச்செயலை கண்டித்தே போக்குவரத்து தொழிலாளர்கள் 04.01.2018 முதல் போராட்டத்தில் இறங்கினர். மிக பெரும்பான்மை தொழிலாளர்கள் போராடுவதே மேற்சொன்ன ஒப்பந்தம் மோசடியானது என்பதை தெளிவுபடுத்தும் சட்ட விரோதமாக செயல்பட்ட அரசைக் கண்டிக்காமல் தொழிலாளர்களை கண்டிப்பது சரிதானா?

சட்ட விரோதமாக தொழிலாளர்கள் போராடுவதாக அரசு கருதினால், அரசு அவர்களை வேலை நீக்கம் கூட செய்யட்டும். அதை தொழிலாளர்கள் எதிர் கொள்வர். ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதும், வேலை நிறுத்தத்தை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உயர் நீதிமன்றம் கூறுவது சரியா?

தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். இலட்ச கணக்கான தொழிலாளர்களை நீதிமன்றம் சிறையில் அடைக்கப் போகிறதா? அல்லது நீதிபதி சந்துரு அவர்களின் தீர்ப்பை ஒட்டி நிர்வாகம் தொழிலாளர்களின் பிரச்சனைகளை நீதிதிமன்றம் தலையிடாது என்றும் வேலை நிறுத்தத்தை எதிர்ப்பதற்கு நீதிதிமன்றத்தின் துணையை நாட முடியாது என்று கூறப்போகிறதா? திரு. சந்துருவின் தீர்ப்பை ஒட்டி செயல்படுவதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

Leave A Reply