கோவை, ஜன.8-
தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகங்களின் உரிமை பறிப்புக்கெதிராக காலவரையற்ற போராட்டத்தை நடத்திவரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

ஊதிய உயர்வு, நிலுவை பணப்பலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4ம் தேதி முதல்காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எல்பிஎப், சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் திடீர் எனஅனுமதி மறுத்த நிலையில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட தலைவர் சி.பத்மநபான், பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கதலைவர் ப.காளியப்பன், பொதுச்செயலாளர் அருணகிரிநாதன் மற்றும் ஏஐடியுசி தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்:
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் டி.செல்வகுமார், எல்பிஎப் பொதுசெயலாளர் மணி, டிஎம்பிஎஸ்பி நிர்வாகி பெருமாள், ஏஏஎல்எப் நிர்வாகி கண்ணன், பிடிஎஸ் ராஜேந்திரன் மற்றும் பணியாளர் சங்கம்  உள்ளிட்ட அனைத்து சங்கங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.தங்கவேலு, கே.ஜோதிலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, டி.உதயகுமார், ஆர்.குழந்தைவேலு, எம்.சேதுமாதவன், வி.கே.வெங்கடாச்சலம், எம்.குணசேகரன், எ.முருகேசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்:
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், இந்த விசயத்தில் நீதிமன்றம் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூரில் குமரன் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச சங்க மாவட்ட செயலாளர் ஜி.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.காமராஜ், தொமுச பனியன் சங்கச் செயலாளர் க.ராமகிருஷ்ணன், ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் எம்.ரவி, ஐஎன்டியுசி சங்கச் செயலாளர் ஏ.சிவசாமி, எம்.எல்.எப் சங்க பொதுச் செயலாளர் மனோகரன் ஆகியோர்விளக்கி பேசினர். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்ட நிர்வாகிகள் டி.குமார், பி.பாலன், ஜி.சம்பத் உள்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு:
ஈரோடு அரசுப் போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் சின்னசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில்தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்துத் தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். இதேபோல், அந்தியூர் மேட்டூர் பிரிவில் சிஐடியு பவானி தாலுகா பொதுத்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் எ.ஜெகநாதன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரகுராமன், விதொச தாலுகா செயலாளர் சிதம்பரம், மாணிக்கம், தாலுகாதலைவர் டி.ரவீந்திரன், விவசாயிகள்சங்கத்தின் மாவட்ட தலைவர் எ.அய்யாவு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்
இதேபோல், நாமக்கல் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பூங்கா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், பள்ளிப்பாளையத்தில் சிஜடியு தொழிற்சங்கத்தின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஜடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.அசோகன், காசிவிஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் ரவி வரவேற்று பேசினார். விசைத்தறி தொழிலாளர் சங்க முத்துகுமார் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியகுழு உறுப்பினர் வெங்கடாசலம், சுந்தரம், ரமேஷ், சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

அரசு ஊழியர்கள் அதரவுநியாயம் கேட்டுப் போராடி வரும் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களது கோரிக்கையை தமிழக அரசு நியாயமான முறையில் சுமூகத் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு முழக்கம் எழுப்பினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தையும், அரசின் நிலைபாட்டையும் பற்றி விளக்கிப் பேசினார்.

இதேபோல், தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிளைத் தலைவர்ராஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.