பள்ளிப்பாளையம், ஜன.8-
நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொன்னி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் பொன்னி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு முதலிய பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு விவசாயிகளிடமிருந்து ஆலை நிர்வாகம் கொள்முதல் செய்து வருகின்றது. இந்நிலையில் இந்த ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவை தொகையாக ரூ.110 கோடிக்கும் நிலுவை வைத்துள்ளது. எனவே, நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த டிச.29 ஆம் தேதி திருச்செங்கோடு கோட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என கரும்பு விவசாய சங்கத்தினர் திங்களன்று பொன்னி சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஏ.முத்துசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் செ.நல்லாகவுண்டர் வாழ்த்துரை ஆற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மேலும், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் எம்.செங்கோட்டையன், துணை செயலாளர்கள் ஏ.மாணிக்கம். கு.பூபதி, ஆர்.குமாரசாமி, கரும்பு ஆலை மாவட்ட நிர்வாகிகள் ஜெயபிரகாசம், கனகராசன், ஈஸ்வரன், பழனிவேல், தட்சிணமுர்த்தி உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.