புதுதில்லி, ஜன. 8-

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை 500 ரூபாயில் பெறலாம் என்று ஆதார் நிறுவனத்தின் ஊழலை வெளிக்கொண்டுவந்தமைக்காக அந்தப் பத்திரிக்கையாளர் மற்றும் அந்தப் பத்திரிக்கை நிறுவனத்திற்கு எதிராக, ஆதார் நிறுவனம் யுஐடிஏஐ-யூனிக் ஐடண்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ஆனாலும் இவ்வாறு வழக்குப் பதிவு செய்திருப்பது அவர்களின் எழுத்துரிமையையோ பேச்சு சுதந்திரத்தையோ பறிப்பதற்காக அல்ல என்றும் கூறியிருக்கிறது.

ஆதார் நிறுவனத்தின் ஊழலை வெளிக்கொணர்ந்த தி டிரிப்யூன் நாளேட்டின் பத்திரிகையாளருக்கு எதிராக கிரிமினல் வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு எதிராக மிகவும் விரிவான அளவில் கண்டனக் கணைகள் வெளிவந்ததை அடுத்து ஆதார் நிறுவனம் இவ்வாறு மழுப்பல் காரணங்களைக் கூறத் தொடங்கியிருக்கிறது. ஆதார் நிறுவனத்திற்குள் அதிகாரபூர்வமற்றவர்கள் நுழைந்திருப்பதாக செய்தி வந்துள்ளதை அடுத்து அனைத்து உண்மைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டியது எங்கள் கடமை என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆதார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஒரு முதல் தகவல் அறிக்கை தில்லி காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவில் அனில் குமார், சுனில் குமார், ராஜ், ரச்னா கைரா, தி டிரிப்யூன் மற்றும் அடையாளம் தெரியாத பலருக்கு எதிராக, ஆதார் சட்டம் 36 மற்றும் 37, இந்தியத் தண்டனைச் சட்டம் 419 (ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்), 420 (ஏமாற்றி நேர்மையற்ற வகையில் பொருளை ஒப்படைக்கத் தூண்டுதல்), 468 (ஏமாற்றும் பொருட்டு சிருஷ்டனை செய்தல்), 471 (சிருஷ்டனை செய்யப்பட்ட பத்திரத்தை உண்மையானது போலப் பயன்படுத்துதல்) மற்றும் வருமான வரிச்சட்டம் 66 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.”

“இவ்வாறு வழக்குப் பதிவு செய்துள்ளதை, ஊடகங்களையோ அல்லது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்களையோ குறிவைத்துத்தாக்குவதாக கருதிடக் கூடாது”என்றும் ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதார் நிறுவனத்தின் இந்நடவடிகையை எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, பிரஸ் கிளப் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. பொதுநலன் கருதி புலனாய்வு மேற்கொண்ட ஒரு பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுத்திருப்பது, அவரை மிரட்டிப் பணியவைக்கும் செயலே என்பது தெளிவாகத் தெரிகிறது. இது நேர்மையற்ற செயல், அநீதியானது மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும் என்று எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அறிவுஜீவிகள் அரசாங்கத்தின் திட்டங்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினால் அவற்றைக் களைவதற்குப் பதிலாக, அவர்கள் மீது வழக்குதொடுப்பது என்பது அரசு ஒரு கொடுங்கோலரசாக மாறிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: