ஈரோடு, ஜன.8-
நீர் நிலை ஆக்கிரமிப்பில் உள்ள மக்களுக்கு அரசு வீடு கட்டிகொடுத்த பின்னரே குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11 ஆவது மாவட்ட மாநாட்டின் அறைகூவல் படி, ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவு செய்து, சாலைகளை சீரமைக்க வேண்டும். வீட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். அரசு தலைமை மருத்துவமனையை உயர் அறுவை சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் தரம் உயர்த்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் மருந்து உபகரணங்கள் வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.மேலும், நீர் நிலை ஆக்கிரமிப்பில் உள்ள மக்களுக்கு அரசுவீடு கட்டி கொடுத்த பின்னரே குடியிருப்புகளை அகற்ற வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்கி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வகை செய்ய வேண்டும். அந்தியூர் அரசு மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை துவக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று மாவட்டம் முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.நாச்சிமுத்து, ஈரோடு தாலுகா செயலாளர் பி.ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் லலிதா, பிரசன்னா, அண்ணாதுரை, கே.ராஜ்குமார், வாலிபர் சங்க நிர்வாகிகள் சகாதேவன், பாலசுப்பிரமணியம், வீரபாண்டியன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். இறுதியாக, ஈரோடு வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தாலுகாகமிட்டி உறுப்பினர் ஆர்.திருநாவுக்கரசு, கமிட்டி உறுப்பினர்கள் வி.கே.ஆறுமுகம், எஸ்.ராதா உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், பெருந்துறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் எஸ்.என்.மயில்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி, தாலுகா செயலாளர் கே.குப்புசாமி, மாவட்டகுழு உறுப்பினர் கே.ரவி, தாலுகா கமிட்டி உறுப்பினர் பி.முத்துபழனிச்சாமி, கே.ஜெயலட்சுமி, என்.மூர்த்தி, வி.ஏ.விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் டி.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பழனிச்சாமி, ஜி.பழனிச்சாமி, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல், மாவட்டகுழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். விவசாயிகள் சங்கநிர்வாகி கே.கண்ணுசாமி, கமிட்டி உறுப்பினர் சீனிவாசன், சித்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் கெம்பராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முனுசாமி, விஜயராகவன், மாவட்டகுழு உறுப்பினர் மாணிக்கம், தாலுகா குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் நந்தகுமார், வெங்கிடுசாமி, துரைசாமி, சுப்பிரமணியன், பன்னீர்செல்வி உட்பட100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.