திருப்பூர், ஜன. 8 –
அவிநாசி புதுப்பாளையம் ஊராட்சியில் உலோகங்களை உருக்கும் ஆலை அமைந்தால் நச்சுப் புகை வெளியேறி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் திங்களன்று குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

நச்சுத் தன்மை ஆலையை அனுமதிக்க எதிர்ப்பு:
அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது ஊரில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இதில், பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து நாதம்பாளையம் செல்லும் சாலையில் புதிதாக செம்பு, அலுமினியம், பித்தளை போன்ற உலோகங்களை உருக்கும் தொழிற்சாலை தொடங்கவுள்ளனர். இந்த ஆலையிலிருந்து நச்சுத் தன்மை வாய்ந்த புகை வெளியேறும் என்றும், கார்பன் மோனாக்சைடு, சல்பர்-டை ஆக்சைடு போன்ற கொடிய புகைகளை ஆலை வெளியேற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அதை சுவாசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் வனஉயிரினங்களான மான், மயில் போன்றவைகளும் கடுமையாக பாதிக்கப்படும். கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயமும் அதிகம் உள்ளது. எனவே, புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலையை தடை செய்து, சுற்றுசூழல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தெரு விளக்குகள் அமைக்கக் கோரி…
திருப்பூர், நாச்சிபாளையம் பகுதிமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அனைத்து வீதிகளிலும் மின்சார தெரு விளக்குகள் போதிய அளவில் அமைக்கப்படவில்லை. அமைக்கப்பட்டுள்ள விளக்குகளும் சரியாக எரிவதில்லை. இதுகுறித்து பொங்கலூர் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார்மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தொடர்ந்து பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. பெண்கள் மாலை நேரத்திற்கு மேல் வெளியில் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதுகுறித்து புகார் அளிக்க தொலைவில் உள்ள அவிநாசிபாளையம் காவல் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், குற்ற சம்பவங்கள் கொலை, கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, இப்பகுதியில் நிரந்தரமாக போலீஸார் இருந்து, பாதுகாப்பு வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இரும்பு ஆலையை மூட வேண்டும்:
பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், பல்லடம், அனுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலையால் வெளியேற்றப்படும் கரும்புகையால் சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு, பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டோர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அனுப்பட்டியிலிருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்து சரியான நேரத்தில் வருவதில்லை. இதனால் பொது மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்தை சரியான நேரத்தில் இயக்க வேண்டும். அனுப்பட்டியில் சமுதாய நலக்கூடம், சுகாதார கழிப்பிடம் அமைப்பதுடன், கொசு உற்பத்தியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கந்து வட்டி கொடுமை:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி நல்லமணி (87). ஆட்சியரகத்தில் அளித்த மனுவில், எனது மகன் ஜவகர் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி ஜான்சி ஆகிய இருவரும் தொழில் ரீதியாக பணத் தேவைக்கு, எனது பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து. அதே பகுதியில் உள்ள ஒருவரிடம், கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு ரூபாய் வட்டிக்கு ரூ.15 லட்சம் வாங்கினர். ஒரு ஆண்டு வரை தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.15 ஆயிரம் வட்டி செலுத்தி வந்த நிலையில், திடீரென அவர் வட்டி சதவீதத்தை உயர்த்தி கூடுதல் பணம்கேட்டார். அதற்குப் பிறகு எங்களால் பணம் கட்ட முடியவில்லை. இதையடுத்து, கடன் அளித்தவர் என்னை ஏமாற்றி, வீட்டு பத்திரத்தை அவரது பெயரில் மாற்றிக் கொண்டார். தற்போது ரூ.90 லட்சத்திற்கு மேல் கொடுத்தால் தான் வீட்டு பத்திரத்தை திருப்பித்தர முடியும், என்று எங்களை அவர் மிரட்டி வருகிறார். எனவே, இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் ஆம்புலன்ஸில் வந்து இந்த மூதாட்டி மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், திங்கள்கிழமை கழுத்தில் விஷ பாட்டிலை மாட்டிக் கொண்டு வந்துமனு அளித்தார். ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிடில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரேல் பங்க் மீது புகார்: நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிரப்பும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசு மற்றும் சென்னை வெடிபொருள் ஆணையத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மையங்களின் உரிமம் புதுப்பிக்க வேண்டும். பெட்ரோல் நிரப்பும் மையங்களில் பெட்ரோல், டீசல் அடிக்க வருபவர்களுக்கு நல்ல தண்ணீர் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். கழிப்பிட வசதி தூய்மையாக ஏற்பாடு செய்து தர வேண்டும். பல பெட்ரோல் நிரப்பும் மையங்களில் மின் மீட்டரை தவறாகப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் குறைவாக அடிக்கப்பட்டு வருகிறது. இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காற்று நிரப்பித் தர வேண்டும். ஆனால் இந்த வரைமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு முறையாக ரசீது வழங்கப்படுவதில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி, ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.