திருப்பூர், ஜன.8-
துணை டவர் நிறுவனத்துக்கு சிஎம்டி நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎஸ்என்எல் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தை பிரித்து அலைபேசி கோபுரங்களை மட்டும் நிர்வாகம் செய்யதுணை நிறுவனம் அமைப்பதென மத்திய அரசு முடிவை பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் எதிர்ப்பை மீறி துணை டவர் நிறுவனத்துக்கு தலைமை நிர்வாக இயக்குநரை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கு கடும்எதிர்ப்புத் தெரிவித்து பிஎஸ்என்எல் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பாக திங்களன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்பாட்டத்திற்கு என்எப்டிஇ கிளை தலைவர் என்.ரவி தலைமை வகித்தார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், என்எப்டிஇ துணை செயலாளர் எஸ்.அந்தோனிமரியபிரகாஷ், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க தலைவர் பி.சௌந்தரபாண்டியன், எஸ்என்டிஇ அதிகாரிகள் சங்க நிர்வாகி எம். பழனிவேல்சாமி, எப்.என்.டி.ஓ மாநில நிர்வாகி என்.தனபதி,அதிகாரிகள் சங்க நிர்வாகி ஜி.சம்பத்குமார், ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகி அர்ஜூனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பிஎஸ்என்எல் கிளை தலைவர் வில்சன் நன்றி கூறினார். இதில்திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பல்லடம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு முன்பாக திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் பி.கல்யாணராமன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் எம்.காந்தி, மாவட்ட துணைத் தலைவர் எம்.முருகசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில்திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்:
சேலம் சீரங்கபாளையம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இ.கோபால், மாநில நிர்வாகி தமிழ்மணி, ஹரிகரன் உள்ளிட்டு 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர்கள் சங்கத்தின் வட்டக் கிளை தலைவர் வி.சசிதரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் பி,தங்கமணி, கிளைச் செயலாளர் ஆர்,பிரபாகரன், எஸ்என்இஏகிளைச் செயலாளர் ஆர்,அன்பரசு, என்எப்டி நிர்வாகி இ.ராஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். முடிவில் என் எப்டிஇ சங்க நிர்வாகி எம்.பிரிட்டோ அலெக்சான்டர் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.