திருப்பூர், ஜன. 8 –
ரேசன் பொருட்களை முறையாக வழங்கக் கோரி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மார்க்சிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பொது வினியோகத் திட்டத்தில் முறையாக பொருள்கள் வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு குளறுபடிகளை அலைக்கழிக்காமல் சரி செய்ய வேண்டும். ரேசன் சர்க்கரை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை கார்டுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாம்பாளையம், காசிகவுண்டன்புதூர், கருணைபாளையம், பெரிய நாதம்பாளையம் ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஆர்.வேலுச்சாமி, பி.கனகராஜ், வி.தேவி, ஆர்.பழனிச்சாமி, ஏ.ராஜன், ஏ.சண்முகம், பி.பழனிச்சாமி, கிளைசெயலாளர்கள் என்.கருப்புசாமி, டி.ஞானகுமார், எஸ்.பரிமளம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி ஆர்.எஸ்யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சரஸ்வதி, தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.கே.கொளந்தசாமி, கை.குழந்தைசாமி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதன்பின் ஊத்துக்குளி வட்டாட்சியரிடம் 107 வீட்டுமனைப் பட்டா கோரும் மனுக்கள் பயனாளிகளால் தனித்தனியாக வழங்கப்பட்டது. மேலும், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மங்கலம் ரேசன் கடை முன்பு ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி கிளை செயலாளர் யாசுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களை அதிகப்படுத்தி காதார பணிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.