புதுதில்லி;
தீபிகா படுகோனே நடித்த ‘பத்மாவதி’ திரைப்படம், ‘பத்மாவத்’ என்ற பெயர் மாற்றத்துடன் குடியரசுத் தினத்தையொட்டி ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.பிரபல ஹிந்தி பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜஸ்தானை ஆண்ட சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் ராணி பத்மினியாக தீபிகா படுகோனே, மகாராஜா ரத்தன் சிங்காக ஷாகித் கபூர், சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரண்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘பத்மாவதி’ படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ், சர்வ் பிராமின் மகாசபா உள்ளிட்ட சங்-பரிவாரங்களின் தூண்டுதல் பேரில், ராஜபுத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ராஜ்புத் கர்னி சேனா, சத்ரிய சமோஜ் உள்ளிட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், நடிகை தீபிகா படுகோனே, இயக்குநர் பன்சாலி உள்ளிட்டோரின் உயிருக்கு விலை அறிவித்தனர். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் பத்மாவதி படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டது. ரூ. 130 கோடி செலவில் தயாரான படம் முடங்கியது.இந்த நிலையில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்குவதற்கு படக்குழு சம்மதம் தெரிவித்து, படத்தை மீண்டும தில்லியில் உள்ள தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி வைத்தது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்யுமாறு கூறினர்.

குறிப்பாக படத்தின் பெயரை ‘பத்மாவத்’ என மாற்றுமாறு கூறிய அவர்கள், ராணி பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் பாடும் கனவு பாடல் காட்சிகளிலும் திருத்தம் செய்யக் கோரினர். அத்துடன், படத்தில் மொத்தம் 26 காட்சிகளில் வெட்டு செய்ய வைத்த அவர்கள், இறுதியில் ‘பத்மாவத்’ படத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் யு/ஏ சான்றிதழ் வழங்கி திரையிட அனுமதி அளித்தனர்.இதையடுத்து ‘பத்மாவத்’ படத்தை விரைந்து திரைக்கு கொண்டுவரும் ஏற்பாடுகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். படத்தை குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.சங்-பரிவாரத்தின் எதிர்ப்பு பிரச்சாரத்தால், படத்திற்கு கூடுதல் விளம்பரம் கிடைத்துள்ளதால், முன்பு திட்டமிடப்பட்டதை விட கூடுதலாக 60 நாடுகளில் படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.