புதுதில்லி;
ஒர்பாலின உறவை கிரிமினல் குற்றமாகவே கருத வேண்டும் என்று 2013-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யத் தயார் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஓர்பாலின உறவு கிரிமினல் குற்றம் ஆகாது என்று தில்லி உயர் நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன், ஓர்பாலின உறவு சட்டப்பிரிவு 377-இன் கீழ் குற்றமே என்று அறிவித்தது.

இதை எதிர்த்து, ஓர்பாலின ஈர்ப்பாளர்கள் 5 பேர், உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஓர்பாலின உறவை தவறு என வரையறுக்கும் சட்டப் பிரிவு 377-ஐ மறுவரையறை செய்ய வேண்டும்; காலத்திற்கு ஏற்ப சட்ட நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்” என்ற மனுதாரர்களின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தனர்.உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை, ஓர்பாலின ஈர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.தனி அந்தரங்க பாதுகாப்பு, அடிப்படை உரிமையாகுமா? என்ற விஷயம் குறித்து, உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு, தனிநபர் சுதந்திரம், தனிநபர் பாதுகாப்புக்கு உறுதி வழங்குகிறது; இதில் தனிநபர் பாதுகாப்பு என்ற அம்சத்தில் தனிநபர் ரகசியக் காப்பும் அடங்கும்” என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

“ஒருவர் தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வீட்டுக்குள் யார் வரவேண்டும் யார் வீட்டுக்குள் வரக்கூடாது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம்.

அதுதான் அவரது மாண்பை காக்கும். இது உடல் ரீதியாக மட்டுமல்ல தொழில்நுட்ப ரீதியாகவும் பொருந்தக்கூடியது. யாருடன் வாழ்கிறார், யாருடன் வாழ வேண்டும் என்பது தனிப்பட்ட நபர் சார்ந்த விஷயம். அதில் தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறர் தலையிட்டு உளவு பார்ப்பது மாண்பை குலைக்கும் செயல். மாண்பு காப்பாற்றப்பட வேண்டும் குடும்பம், திருமணம், பாலியல் சார்பு போன்ற குடும்பம் சார்ந்த அந்தரங்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவையெல்லாம்தான் தனி நபர் மாண்பை காப்பாற்ற உதவும்”. என்றும் விரிவாக நீதிபதிகள் விளக்கி இருந்தனர்.ஆதார் வழக்கில் அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே ஓர்பாலின ஈர்ப்பாளர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். உச்ச நீதிமன்றமும் அதனை ஏற்று, தங்களின் 2013-ஆண்டு தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின், 377-ஆவது பிரிவு, 1860-ஆம் ஆண்டு- சுமார் 153 வருடங்களுக்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதாகம். ஓர்பாலினத்தவர் இடையேயான பாலுறவை இயற்கைக்கு மாறான குற்றம் என்று இந்த சட்டம் வரையறை செய்துள்ளது. பாலியல் வல்லுறவுக்கு இணையான தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகிறது. அதுமட்டுமன்றி, ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ‘ஓரல் செக்ஸ்’ எனப்படும் வாய்வழி உறவு இருந்தாலும் அது குற்றம்தான் என்று இந்த சட்டம் சொல்கிறது. ஆணுறுப்பு, பெண்ணுறுப்புடன் இணைவது மட்டுமே சரியான பாலுறவு என்றும் இந்த சட்டம் வரையறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.