அலங்காநல்லூர்;
கரும்பு பாக்கியை வழங்கக் கோரி மனுக்கொடுக்கச் சென்ற கரும்புவிவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. அது மட்டுமின்றி கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரின் வேஷ்டியை உருவி இழிவுபடுத்தியது. சட்டசபை தொடங்கிய நாளில் (திங்கள்) நடைபெற்ற இந்தச் சம்பவம் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.13 கோடி பாக்கி வைத்துள்ளது.அந்தப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18-ஆம் ஆண்டிற்கான கரும்புக்கு மாநில அரசு பரிந்துரை விலையை உயர்த்தி வழங்கவேண்டுமென வலியுறுத்தி கரும்புவிவசாயிகள் திங்களன்று ஆலை நிர்வாகத்திடம் மனுக் கொடுப்பதற்காகத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் ஆலை முன்பு ஏராளமானோர் திரண்டனர். 

மனுக்கொடுக்கப் புறப்பட்ட அவர்களை அலங்காநல்லூர் காவல் துறையினர் ஆலைவாயிலில் தடுத்து நிறுத்தினர். சட்டசபை தொடங்கியுள்ள நாளில் அரசின் கவனத்தை ஈர்த்து பாக்கியைப் பெறுவதற்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். விவசாயிகளாகிய ‘நாங்கள் நடத்தும் ஆலைக்குள்’ எங்களைச் செல்ல அனுமதியுங்கள் என வற்புறுத்தினர். ஆனால் ஆலைக்குள் செல்ல அவர் களைக் காவல்துறை அனுமதிக்க வில்லை.

இதையடுத்து விவசாயிகள், சட்டசபை தொடங்கியுள்ள நாளில் காவல்துறை எங்களைத் திட்டமிட்டு அவமானப்படுத்துகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயி
களுக்குத் தர வேண்டிய பலகோடி ரூபாய் பாக்கியைத் தரவில்லை. சர்க்கரை ஆலை முதலாளிகள் தமிழக அரசுக்கே சவால் விடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடி
யாத தமிழக அரசு, காவல்துறை மூலம் எங்களை அச்சுறுத்துகிறது என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மனித உரிமை மீறல்
விவசாயிகளின் கோரிக்கை களைக் காதுகொடுத்துக் கேட்க மறுத்த காவல்துறை அவர்களைக் கைது செய்ய முயற்சித்தது. இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடு பட்டனர். அப்போது போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஒருவர் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரனின் வேஷ்டியை உருவியது விவசாய வர்க்கத்தையே இழிவுபடுத்தியது. மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். மனுக்கொடுக்க வந்திருந்த பெண்கள் அலங்காநல்லூர் காவல்துறையின் மோசமான நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் த.செல்லக்கண்ணு, கரு.கதிரேசன், ஸ்டாலின்குமார், ராமராஜ்,செல்லம்பட்டி மகாதேவன், கரும்பு மேம்பாட்டுச் சங்க நிர்வாகி அழகர் சாமி உட்பட 71 பேர் கைது செய்யப் பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.