கடந்த சில நாட்களாக சுமாா் 1 இலட்சம் அரசு போக்குவரத்து துறைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். மூன்று ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வரும் சம்பள உயர்வு, வழங்கப் படாமல் இருக்கும் 7000 கோடி ரூபாய் சம்பளம், பி.எப், பென்சன் பாக்கிகள் தான் போராட்டத்திற்கு காரணமாகும்.இதை வெறும் வறட்டு கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட அதிமுக அரசாங்கமானது, பஸ் ஸ்ட்ரைக்கை உடைக்க ஆபத்தான பரிசோதனையில் இறங்கியுள்ளது.

பல ஆண்டு காலம் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி சோம்பேறிகளாக வாழ்ந்த “கருங்காலி” அதிமுக தொழிற்சங்க பெருச்சாளிகளை வணடிகளில் உட்காரச் சொல்லியுள்ளது; இவர்கள் சில ஆயிரம் பேர் தான் என்பதால் தினக் கூலிக்கு கூவிக்கூவி அழைத்து அள் எடுக்கின்றன ; பஸ் டிரைவர் சீட்டில் முதன் முறையாக உட்கார்ந்து பார்ப்பவர்கள், டெம்போ, வேன் ஓட்டுநர்கள், ரிவர்ஸ் கியர் கூட போடத் தெரியாதவர்கள், வண்டிகளில் போய் இடிப்பவர்கள் என ஆயிரம் பேரை தற்காலிக டிரைவர்கள் ஆக்கி மக்களின் உயிரோடு விளையாடுகிறது ; தற்குறிகள் ஏற்படுத்திய விபத்தில் இது வரையில் மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.

வெட்கங்கெட்ட போக்குவரத்து துறை அமைச்சர் M.R.விஜய பாஸ்கர் தனது சொந்த மாவட்டத்தில், கரூரில் 100 % பஸ்கள் ஓடுவதாக பீற்றிக் கொண்டார். ஆனால், த.நா.ல் 15,000 பஸ்கள் ஓடாதது பற்றியும், 20 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேசித் தீர்க்க முடியாத நிலைமை பற்றியும் சிறிதுக் கூட வெட்கப்படவில்லை. “மாண்புமிகு” செங்கோட்டையன் 7000 கோடி ரூபாய் பணபாக்கிகளை வழங்குவதற்கு, “கஜானாவில் பணம் இல்லை” என்கிறார். போக்குவரத்து கழகத்தின் மாபெரும் ஊழல்களின் முன்னோடியே செங்கோட்டையன் தான் ! தினந்தோறும் கண்டக்டர் & டிரைவர் வந்து கட்டிய கலெக்சன் பணம் எங்கே போனது ? அதையும் தின்று தீர்த்து விட்டீர்களா ?

#தொழிலாளர்கள்_போராட்டம்_நியாயமானதா ?

தொழில் தருமத்திற்கு உட்பட்டதா ?
*******************************
“போக்குவரத்து தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள், சொகுசான வேலை பார்ப்பவர்கள், இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர், திடீரென்று போராட்டத்தில் இறங்கி பொதுமக்களை வாட்டி வதைக்கலாமா? ” என பொதுப் புத்தி உருவாக்கப் பட்டுள்ளது. உண்மையா ?

1) TNSTC அரசுப் போக்குவரத்து துறையில் புதிதாக சேரும் ஒரு நிரந்தரமான Permanent தொழிலாளியின் மாத அடிப்படை சம்பளம் Basic pay ரூ.5,500 தான் ; படிகள் உட்பட மொத்தம் சம்பளம் ரூ. 16,000 கிடைக்கும்.

ஓய்வு பெறும் நிலையில் 58 வயது உள்ள தொழிலாளியின் மொத்த மாத சம்பளம் ரூ.40,000 வரை இருக்கும். பிடித்தங்கள் போக 20,000 ஆ ,30,000 ஆ எவ்வளவு கிடைக்கும் என்பது அவருக்கே தெரியாது ; அவ்வளவு கடன்கள் வாங்கியிருப்பார்.

2) அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் & நடத்துநர் /டிரைவர் & கண்டக்டர் ஒருவர் ஒரு முறைக்கு 450 – 500 கீ.மி வரை செல்ல வேண்டும். வாரம் 3 முறையும், ஒரு ஆண்டில் சராசரி 50 வாரங்கள் என்றால், சுமார் 75,000 கி.மீ ஓட வேண்டும். தரமற்ற, தகுதியற்ற சாலகளில், இரவு பகல், வெயில் மழை, வெள்ளம் என அனைத்தையும் எதிர்கொண்டு, தனது 30 ஆண்டு கால சர்வீசில் மட்டுமே சுமார் 25 இலட்சம் கி.மீ பயணம் செய்ய வேண்டும். முறையான பராமரிப்பு இல்லாத வண்டிகளால் நடுவழியில் ஏற்படும் தொந்தரவுகள், வண்டிகளில் இரவு தூக்கம் என வாழ்க்கை மிகவும் சிரமமானது.

3) 2016 ல், மூன்றாண்டுகளுக்கு முன்னர் போடப்பட வேண்டிய சம்பள உயர்வு ஒப்பந்தம், 22 பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் முடியவில்லை. அடிப்படை சம்பளத்தை 2.44 மடங்கு உயர்த்த ஒப்புக் கொள்ளும் நிர்வாகம், தொழிற்சங்கங்களின் கோரிக்கையான 2.57 மடங்கு என்பதை ஏற்க மறுக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஊதிய உயர்வை கடந்த ஓராண்டுக்கு தரமுடியாது என்றும் சண்டித்தனம் செய்கிறது.

4) எல்லாவற்றிற்கும் மேலாக, தற்போது பணிபுரியும் 1.40 இலட்சம் தொழிலாளர்கள் கணக்கில் செலுத்த வேண்டிய PF, கிராஜிவிட்டி, LIC பணம் ஓர் ஆண்டிற்கு சுமார் 48 கோடி ஆகும். இவ் வகையில் ரூ.4600 கோடியை கட்டாமல் நிர்வாகம் முறைகேடு செய்துள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு தர வேண்டிய பணப் பயன்கள் & பென்சன் தொகையில் சுமார் 1400 கோடி செலுத்தப் படாமல் பாக்கியுள்ளது. அவர்களை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் பணம் தருவது தொடர்பான பல வாக்குறுதிகளை அரசும், TNSTC நிர்வாகமும் கடைபிடிக்கவில்லை.

#தொழிலாளர்கள்_போராடாமால்_கொண்டாடவா_செய்வார்கள்?

#போக்குவரத்துக்_கழகத்தின்_சீரழிவுக்கு_காரணங்கள் :-
******************************
தலைவர்களாக ஆளும் கட்சிக்கு ஆதரவான/தோதான IAS, IPS அதிகாரிகள் தான் நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் சொல்லியபடி கையெழுத்துப் போடுகிறார்கள். கூட்டு கொள்ளை அரங்கேறுகிறது.

எட்டுப் போக்குவரத்து கழகங்களின் அனைத்து நிலம், கட்டடச் சொத்துக்களையும், பல்வேறு வங்கிகளில் அடகு வைத்து சுமார் 15,000 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அவல நிலை ?

1) #உலகவங்கி கொள்ளை :
பஸ்கள் வாங்க, கட்ட உலக வங்கி மற்றும் பன்னாட்டு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் & வட்டி மிகமிக அதிகமானது.

2)உதிரிபாகங்கள் கொள்முதல் என்ற பெயரால், கார்ப்பரேட் முதலாளித்துவ & அதிகாரிகள் + அமைச்சர்கள் அடிக்கும் கொள்ளை அபரிதமானது.

3)அப்பாயிண்ட்மென்ட், ட்ரான்ஸ்பர், விரும்பிய இடங்களில் வேலை என்பதற்கு ஆளும் கட்சி சங்கம் & அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளை….

வகைதொகை இல்லாமல் ஊழல் & கொள்ளை நடக்கும் இடத்தில், எப்படி இலாபம் உருவாகும்?

அதிமுக ஆட்சிக் காலத்தில் தான், நிதி நெருக்கடி, பெரும் ஊழலகள் & கொள்ளைகள் நடந்திருக்கிறது.

போக்குவரத்து கழகத்ததை சீரழிக்கும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் & அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை உள்ளே தள்ளுவதற்கு துணிச்சல் இல்லாத நீதிமன்றம் தொழிலாளர்களைப் பார்த்து குலைக்கிறது.
சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்வதாம்! !!

#அய்யா_நீதிமான்களே!

ரூ.80,000 சம்பளம் வாங்கிய உங்களுக்கு தற்போது மாத ரூ. 2.25 இலட்சம் ஆகும். கேட்டு, வாதாடி அல்லது எப்படியோ பெற்றுள்ளீர்கள்; வேறு வேலைக்கு எந்த உச்சநீதிமன்ற நீதிமான்களும் ஓடவில்லை.

உயர்நீதிமன்றத்தில் கோடிக்கோடியாக பணம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு எழுதிய உங்கள் சக நீதிபதிகள் மீதோ, ஒரு பெயில் எடுக்க ரூ.2 இலட்சம் வாங்கும் வழக்கறிஞர்கள் மீதோ நடவடிக்கை எடுத்திருப்பீர்களா?

தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும் போராடினால் “சட்ட விரோதம், வேலை நீக்கம் & கைது… ஜாக்கிரதை ” என மிரட்டுகிறீர்கள். கார்ப்பரேட் முதலாளிகளை விட மோசமாக நடந்து கொள்கிறீர்கள்.

நீதிபதிகள் சட்டங்கள் என்ற பெயரால், ஒருதலைப் பட்சமாக நின்று அறநெறிகளை இழந்து செல்கிறீர்கள். உங்கள் தீர்ப்புகள் மக்கள் மன்றத்தில் தோல்விகளை கவ்வும் நாட்கள் தொலைவில் இல்லை.

#போராட்டம்_தொடர்கிறது_வேலைநிறுத்தம்_நீடிக்கிறது!

தமிழக போக்குவரத்து
தொழிலாளி வர்க்கம் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிராகரித்து போராட்ட களத்தில் முன்னேறுகிறது. போராடும் அவர்களுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான, பல்வேறுபட்ட தரப்புத் தொழிலாளர்களும், தோள் கொடுக்கின்றனர். சிறை செல்கின்றனர்.

#எடப்பாடி_பழனிசாமி அரசாங்கமே !

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று !

இல்லை என்றால், ஆட்சியை விட்டு வெளியேறு !

Leave a Reply

You must be logged in to post a comment.