திருப்பூர், ஜன. 8-
திருப்பூர் பி.என்.சாலையில் உள்ள அண்ணாநகரில் ஞாயிறன்று கோன் அட்டை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகரை அடுத்த அண்ணாநகர் பகுதியில் அமித் என்பவருக்கு சொந்தமான ஸ்டிக்கர் தயார் செய்யும் நிறுவனம் உள்ளது. அதே பகுதியில் அவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. அங்கு ஏராளமான அட்டை உருளைகள், ஸ்டிக்கர்கள் மற்றும் கோன் அட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஞாயிறன்று அதிகாலை அந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையம் மற்றும் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் குடோன் முழுவதும் அட்டை மற்றும் ஸ்டிக்கர்கள் இருந்ததால் ஒருபுறம் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

மற்றொரு பக்கம் ஸ்டிக்கர்கள் அனைத்தும் உருகியதால் ஒன்றோடொன்று ஒட்டி கொண்டது. இதனால் தீயை அணைப்பதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதன்பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.