திருப்பூர், ஜன.6-
ஊத்துக்குளியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி மகேஸ்வரி. இருவரும்கூலித் தொழிலாளிகள். இவர்களது மூத்த மகன்நாகராஜ் (30). இவர் ஊத்துக்குளி அருகே கருமாண்டக்கவுண்டனூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜன.3 ஆம் தேதி காலை இவர்வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். ஊத்துக்குளி ரயில் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் நாகராஜ் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தோர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டார் என மருத்துவர்கள் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாகராஜின் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பிறருக்குவாழ்வு அளிக்க முடியும் என்ற எண்ணத்தில் அவரது பெற்றோர்கள் உறுப்புகளைத்தானம் செய்ய சம்மதித்தனர். இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நாகராஜின் இரு கண்கள், இருதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை மாற்று நபர்களுக்கு பொருத்த சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: