ஈரோடு, ஜன.6-
மாற்றுத்திறனாளுகளுக்கு ஏற்படும் சிரமங்களை களைய மாதந்தோறும் கோட்டாச்சியர் தலைமையிலும். இரு மாதங்களுக்கு ஒரு முறைஆட்சியர் தலைமையிலும் குறைதீர் கூட்டங்கள் நடத்த வேண்டும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச்சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சனியன்று ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் லட்சுமணன், பொதுச்செயலாளர் நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, ஈரோடு மாவட்ட செயலாளர் நடராஜன் உட்பட மாநிலக்குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை வரிசைப் பட்டியல் மாதந்தோறும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒட்ட வேண்டும். அவர்கள் ஏ.டி.எம் மையங்களில் உதவித்தொகையினை பெறும் வகையில் ஏடிஎம் கார்டுகள் வழங்க வேண்டும். அரசு அறிவித்த அரசாணை 27ன் படிநடந்து கொள்ளாமல், சொத்துக்களை காரணம் காட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மறுக்கப்பட்டு வருகிறது.

மேலும், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கும் வகையில் சட்டங்களை திருத்தி நடவடிக்கை எடுப்பதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் உறுதியளித்து ஐந்து மாதங்கள் கடந்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதேபோல், மாவட்ட மனநல சேவைகளை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைப்பதற்கும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு தலைமையை வழங்குவது தவறான அணுகுமுறையாகும். மனநலம் சார்ந்த அடிப்படை சுகாதாரம்
என்பதால், அரசே நேரடியாக இந்த சேவையை செய்ய வேண்டும். அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் இணையதளத்தில் பதிய சொல்லும் நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு, ஒரு செயல் திட்டத்துடன் போதிய நிதி ஒதுக்கீடு செய்து ஊராட்சி அளவில் முகாம்கள் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக பல்நோக்கு அடையாள சான்று வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: