நாகப்பட்டினம், ஜன.7-
தமிழகமெங்கும் நியாயமான கோரிக்கைகளுக்காக 4-வது நாளாகப் போராடிவரும் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்குப் பல்வேறு தொழிற்சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களும் ஆதரவாக உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், நாகை அரசுப்போக்குவரத்துப் பணிமனை (குடந்தை மண்டலம்) அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் சேர்ந்து கொண்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களைக் கடுமையாகமிரட்டி வருகிறார்கள். ‘ஞாயிற்றுக் கிழமை காலை முதல் வேலைக்கு வராவிட்டால், பணி நீக்கம் செய்வோம்; சிறையில் தள்ளுவோம்’ என்று மிரட்டி வருகிறார்கள்.

ஆய்மூர் ஓட்டுநர் ஜி.பிரபாகரன்: நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், ஆய்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி.பிரபாகரன், இவர், நாகப்பட்டினம்- திருச்சி மார்க்கத்தில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். சனிக்கிழமையன்று, பணிமனை மேலாளர், அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் சேர்ந்துகொண்டு பிரபாகரனை மிரட்டியுள்ளனர். ஞாயிறு காலை வேலைக்கு வராவிட்டால், “டிஸ்மிஸ்” செய்துவிடுவோம்; சிறைக்குப் போக வேண்டும்; திரும்ப வேலைக்கு வரமுடியாது என்றெல்லாம் கடுமையாக மிரட்டியுள்ளனர்.

அன்று இரவு, பிரபாகரன் வீட்டுக்குச் சென்று, உண்ணாமல், உறங்காமல் மிகுந்த வேதனையிலும் பதற்றத்திலும் இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலையில் விஷமருந்தி ஆபத்தான நிலையில் இருந்த பிரபாகரனை அவரது உறவினர்கள், திருவாரூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து, அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த எஸ்.ஆர்.ராஜேந்திரன், எஸ்.செல்வகுமார், ஜி.இடும்பசாமி, ஏ.பஞ்சநாதன், வி.கலியபெருமாள், எம்.மோகன், எம்.பரமசிவம்,டி.சண்முகசுந்தரம், ஆர்.சரவணன் உள்ளிட்ட பலர் ஓட்டுநர் பிரபா
கரனை நேரில் பார்த்து விசாரித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.