“தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா?” என்ற தலைப்பில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் நண்பர் சமஸ் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். எடுத்துக் கொண்ட பிரச்சனையை ஆழமாக, பல கோணங்களில் பார்த்து, பரிசீலித்து கட்டுரைகளை எழுதிடும் இன்றைய பத்திரிகை யாளர்களில் முக்கியமானவர் சமஸ். தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதா,

இல்லையா என்று கேள்வி எழுப்பி வெற்றிடம் இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். இந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் அந்தக் கட்டுரையின் போக்கில் அவரது சில நிர்ணயிப்புகள் பொருத்தமாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. “திராவிடக் கட்சிகளின் சாதனைகள் தமிழர்களின் சாதனைகள் என்றால், திராவிடக் கட்சிகளின் இழிவுகளும் தமிழர்களின் இழிவுகள்தானே? வெறுமனே கட்சிகளை மட்டும் அவற்றுக்கு எப்படிப் பொறுப்பாக்க முடியும்?” என்ற கூற்றை ஏற்க இயலாது. இத்தாலிய மார்க்சிய அறிஞர் அந்தோணியோ கிராம்சி கூறுகிறார்: “வர லாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் சமூகத்தில் நிலவும் கலாச்சாரம் அக்காலத்திய ஆளும் வர்க்கக் கலாச்சாரமே.” கடந்த 50 ஆண்டு காலமாக தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சி கள்தான் தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்தன. “தமிழர்களின் இழிவுகளுக்கு ‘வெறுமனே’ கட்சிகளை மட்டும் பொறுப் பாக்க முடியுமா?” என்று நண்பர் சமஸ் எழுப்பியுள்ள கேள்வியின் பொருள் மக்களையும் பொறுப்பாக்க வேண்டும் என்பதுதான். இது சரியான மதிப்பீடல்ல.

தமிழகத்தில் நிகழ்ந்துள்ள சாதனைகள் அனைத்தும் திராவிடக் கட்சிகளால் நிகழ்ந்ததுதான் என்று வாதிடும் போது, இழிவுகளுக்கு யார் காரணம் என்ற கேள்வி
எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்கு மக்கள்தான் பொறுப்பு என்று கை காட்டுவது பொருத்தமானது அல்ல. இன்றைய தி.மு.க. தலைமை “எல்லா சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முனைப்பையும் வெளிப் படுத்தி வருகிறது” என்று கூறி ஆ. ராசாவுக்கும் ஒரு மாவட்டத்தின் திமுக செய லாளர் கணேசனுக்கும் திமுக தலைமை முக்கியத்துவம் கொடுத்துள்ளதை உதாரணமாகக் காட்டுகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வர வேற்கத்தக்கதுதான். ஆனால் அதைவிட வும் முக்கியமானது, ஒடுக்கப்பட்ட சமூகம் கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளாகும் போது அதற்கு இன்றைய திமுக தலைமை குரல் கொடுக்கிறதா என்பது. சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட உடுமலை சங்கர் கொலை வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி கருத்து ஏதும்
சொல்லாததோடு, தங்களின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இந்தத் தீர்ப்பு பற்றிய செய்தியே வராமல் பார்த்துக் கொண்டது தற்செயலானதல்ல.

“அரசியல்வாதிகளுக்கு வசதி எங்கிருந்து வருகிறது?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு “அரசியல்வாதி என்றால் கோவணத்தோடு நிற்கவேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” என தினகரன் எழுப்பிய பதில் கேள்வியை சமஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டு, தினகரன் திறமை மிக்கவர் என்று சான்றிதழ் தருகிறார். இது விசித்திரமாக உள்ளது.  அரசியல் கட்சித் தலைவர்கள் காரில் செல்வதையோ, பளிச்சென்ற உடை உடுத்து வதையோ ஊடகவியலாளர் கேள்விக்குறி யாக ஆக்கியதாக நான் கருதவில்லை. ஊடகவியலாளரது கேள்வியின் பொருள், ஒரு நடுத்தர அல்லது உழைக்கும் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அரசியலுக்கு வந்த பிறகு, பல நூறு கோடிகளுக்கு ஏன், பல்லாயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக எப்படி வர முடிகிறது என்பதே ஆகும். அதற்கு தினகரனின் பதில் எகத்தாளமாக உள்ளதே தவிர, எதார்த்தமாக இருப்பதாக கருத முடியாது.

சமகாலத்தில் தமிழகத்தில் நிலவும்சமூகப் பிரச்சனைகள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் சாதி ஒடுக்குமுறை கள் பற்றியும், அவைகளின் மீது அரசியல் கட்சிகள் எப்படியான நிலைபாடுகளை மேற்கொள்கின்றன; அரசியல்வாதிகள் அரசியலுக்கு வரும்போது எப்படி இருந்தார்கள்: இப்போது எப்படி உள்ளார்கள் என்பதையும் மக்கள் கூர்மையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு (மக்களோடு) தொடர்ச்சியாக உரையாடும் நண்பர் சமஸுக்கு இது தெரியாதா? எந்தவொரு கேள்விக்கும் சிரித்தபடி அனாயசமாக பதில் அளிப்பதும், போலி மதிப்பீடுகளை , பிம்பங்களை தினகரன் உடைப்பதைக் காட்டுகிறது என்கிறார் சமஸ்.இது பிம்பங்களை உடைப்பதல்ல; ஊழல் கலையில் அவர் கற்றுத் தேர்ந்துவிட்டார் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

Leave a Reply

You must be logged in to post a comment.