திருப்பூர், ஜன. 6 –
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 80 சதவிகித அரசு பேருந்துகள்பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டன.

தமிழக அரசுடனான 13 ஆவது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து சனியன்று 3 ஆவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் சனிக்கிழமை 80 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. கல்வி நிறுவனங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்களை வைத்து தற்காலிக ஓட்டுநர்களாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் ஷ்ரவண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூரில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தற்காலிக ஓட்டுநர்களை வைத்து இயக்கி வருவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிற்சங்க திருப்பூர் மண்டலப் பொருளாளர் என்.சுப்பிரமணி கூறுகையில், இது போன்ற தற்காலிக ஓடுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குவது பயணிகளுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும். குறிப்பாக 90 சதவிகித பேருந்துகள் ஓட்டை உடைசலாக பழுதான நிலையில்தான் இதுவரை அரசுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் சமாளித்து இயக்கி வருகின்றனர். இந்த பேருந்துகளை முன்அனுபவம் இல்லாத, தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் இயக்கினால் விபரீதம் நிகழும் ஆபத்து உள்ளது. எனவே பொதுமக்கள் உயிரோடு விளையாடும் வேலையில் அரசும், கழக நிர்வாகமும் ஈடுபடக்கூடாது. அரசு மீண்டும் தொழிற்சங்கத்தினை அழைத்து பேசி நியாயமான தீர்வு காண வேண்டும்.அது வரை எங்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கூறினார்.

கொள்ளை கட்டணம் வசூலித்த தனியார் போக்குவரத்துதொழிலாளர்கள் வேலை நிறுத்தையொட்டி மாநிலத்தின் பிற பகுதிகள் போல் திருப்பூரிலும் அரசு பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. இதனால் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளை மினி பேருந்துகள், தனியார் பேருந்துகள் ஏற்றிச் சென்றன. இந்தநிலையில் அவிநாசி சாலையில் பேருந்துக்கு காத்திருந்தவர்களிடம் பனியன் நிறுவனத்தின் பேருந்து ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தி, பழையபேருந்து நிலையம் செல்வோர் ஏறுமாறு அழைத்து பயணிகளை ஏற்றினர். பளழைய நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட அந்த பயணிகளிடம் விசாரித்தபோது, அவர்களாக வந்து அழைத்தனர், நாங்களும் வேலைக்குச் செல்வதற்காக இதில் ஏறிவந்தோம். ஆனால், வழக்கத்தை விடஇரண்டு மடங்குக்கும் மேல் கட்டணம் வசூலித்தனர். வேறு வழியில்லாமல் நாங்கள் அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்தோம். அத்துடன் நகரில் அசுர வேகத்தில் பேருந்தை இயக்கி வந்தால், விபத்தில் சிக்க வைத்துவிடுவார்களோ என்று அச்சத்துடனே பயணம் செய்தோம் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.