நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது இன்னிசையும், பாட்டும் நடனமுமாக அந்த பெரு வணிகவளாகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் கூட்டம் குழுமியிருந்தது. எங்கும் உற்சாக ஒலிகள், ஒருவருக்கொருவர் வாழ்த்துப் பரிமாற்றம் பெரும் மகிழ்ச்சி கூப்பாட்டோடு புத்தாண்டு பிறந்தது. கோவையில் புதிதாக திறக்கப்பட்ட பெரு வணிக வளாகத்தில் தான் இந்த காட்சி.

அந்த இடம் முன்பு கோவையின் பிரபலமான பஞ்சாலை ஆக இருந்தது.அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை பார்த்தனர். நிரந்தர வேலை, தொழிற்தகராறு சட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட உரிமைகள், அந்த உரிமைகளை தக்க வைக்கவும், தொழிலாளர் நலன் காக்கவுமான தொழிற்சங்க இயக்கங்கள் என அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு அந்த பஞ்சாலை இயங்கி வந்தது. இன்று அதே இடத்தில் பிரம்மாண்டமாக எழுந்துள்ள பெரு வணிக வளாகத்தில் பணியாற்றும் இளைஞர்கள், இளம் பெண்களின் எண்ணிக்கையும் சில நூறுகளைத் தொடும். ஆனால் பஞ்சாலையாக இருந்தபோது தொழிலாளர்கள் பெற்று இருந்த எந்த உரிமையும் இன்று அவர்களுக்கு இல்லை.

கோவை இயல்பிலேயே மிதமான தட்ப வெட்பத்தை கொண்ட நகரம். அது தான் ஆங்கிலேயரை இங்கு பஞ்சாலை தொடங்க ஆர்வமாய் உந்தித் தள்ளியது. கோவையின் முதல் பஞ்சாலை 1888இல் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயரால் துவக்கப்பட்டது, 1900 ஆம் ஆண்டில் இரண்டாவது பஞ்சாலையாக மால் மில் துவக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவையின் பெரு நிலக்கிழார்கள் பஞ்சாலைகளை துவக்கினர்,  1906இல் மூன்றாவது பஞ்சாலை என கொஞ்சம், கொஞ்சமாக பஞ்சாலைகள் வந்தன. 1929 உலக பொருளாதார நெருக்கடி, மும்பையின் பஞ்சாலைகளை கடுமையாக பாதித்தது. கோயமுத்தூரை சுற்றி அதிகரித்து வந்த பருத்தி விளைச்சலும், குறைவாக வழங்கப்பட்ட கூலியும் மிக அதிக லாபத்தை முதலாளிகளுக்கு வழங்கியது. இதன் விளைவாக 1939 துவங்கி 1948 வரை நூற்றுக்கணக்கான புதிய பஞ்சாலைகள் துவங்கப்பட்டன. கொள்ளை லாபமே குறிக்கோள் என இயங்கின இந்த பஞ்சாலைகள். துவக்கத்தில் 16 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டியிருந்தது. வேலை நேரத்தில் சுணங்கினால் சாட்டையடி பரிசாக தரப்பட்டது. நிரந்தர வருமானமில்லாத, விவசாய கூலி தொழில் செய்து வந்த உழைக்கும் மக்கள், பஞ்சாலைகளை நோக்கி சாரைசாரையாக வரத்தொடங்கினர். அந்த தொழிலாளிகளின் உழைப்பின் பின்னணியில் தான் கோவை “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்ற பெயர் பெற்றது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரு நகரமாக கோவை இன்று எழுந்து நிற்க அந்த உழைப்பாளி மக்கள் தான் அடித்தளமிட்டனர். மூலதனத்தின் லாபப் பசிக்கு அவர்களின் உழைப்பு, தங்கு தடையின்றி வேட்டையாடப்பட்ட சூழலில் தான், செங்கொடி இயக்க தலைமையில் பஞ்சாலை தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. அன்று காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரில் செயல்பட்டோரின் முன் முயற்சியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டன. 1935 ஆம் ஆண்டில் சோசலிஸ்ட் பஞ்சாலை தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் துவக்கப்பட்ட சங்கம், நாடு விடுதலை பெறவும், சோசலிச லட்சியத்தை நோக்கி முன்னேறவும் தொழிலாளர்களை அணி திரட்டியது. புன்செய் விவசாய நிலங்களில், வாழ்வை நகர்த்த இயற்கையோடு போராடிப் பழகியிருந்த அந்த உழைப்பாளி மக்களுக்கு அரசியல் தெளிவையும், போராட்ட உணர்வையும் ஊட்டி வளர்த்தது செங்கொடிச் சங்கம்.

1937இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி அடைந்தது. இதனால் உற்சாகம் பெற்ற தொழிலாளிகள், உரிமைகளை பெற வெகுண்டெழுந்தனர். புகழ் பெற்ற பஞ்சாலையான லட்சுமி மில்லில் தொழிலாளர் வேலை நிறுத்தம் வெடித்தது. போனஸ் கேட்டு வேலை நிறுத்தமும் இவ்வாண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போல பல்வேறு பஞ்சாலைகளில் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 1938இல் முதல் “விசாரணை கோர்ட்” உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறையை மீறியும் எழுந்து வரும் தொழிற்சங்க இயக்கம், பஞ்சாலை முதலாளிகளின் கண்ணை உறுத்தியது. அவர்களில் பலர் அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்தனர். எனவே, தொழிலாளர் போராட்டங்களை பலவீனப்படுத்த, காங்கிரஸ் கொடியின் கீழ் 1938இல் போட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. சோசலிஸ்டுகள் வன்முறையாளர்கள், காங்கிரஸ் விரோதிகள் என்றெல்லாம் அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டது. மறுபுறம் செங்கொடி தொழிற்சங்கத்தின் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது வன்முறைத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. பல இடங்களில் கொலைவெறித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

பல பஞ்சாலை நிர்வாகங்கள், தொழிற்சங்க ஊழியர்களை தாக்கவே ரவுடிகளை வேலைக்கு அமர்த்தினர். அந்த ரவுடிகள் அடிக்கடி தொழிற்சங்க ஊழியர்களை வம்புக்கு இழுத்து, சங்க நடவடிக்கைகளில் இடையூறு செய்து வந்தனர்.பல நேரங்களில் வன்முறைகளிலும் இறங்கினர். அப்படி ஒரு சம்பவம் தான் கோவை ரங்கவிலாஸ் மில்லில் நடைபெற்றது. அந்த மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பொன்னான் என்னும் ரவுடி, செங்கொடி சங்க ஊழியர்களை வம்புக்கு இழுப்பதையும், பெண் தொழிலாளர்களை சீண்டுவதையும் தனது வாடிக்கையாய் கொண்டிருந்தான். குடிபோதையில் அவன் நிகழ்த்திய ஒரு மோதலில் அடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்தான். தனது வாக்குமூலத்தில் செங்கொடி சங்கத்தின் முன்னணி ஊழியர்களாக இருந்த தோழர்கள் இராமையன், சின்னையன், ரங்கண்ணன், வெங்கடாசலம் ஆகியோர் பெயர்களை குறிப்பிட, அவர்கள் மீது ஆங்கிலேய அரசின் காவல்துறை கொலை வழக்கு புனைந்தது. நான்கு பேருமே இளம் தொழிலாளர்கள். அவர்களை பாதுகாக்க பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் கடும் முயற்சி எடுத்தது.

வர்க்க பகைமையோடு இந்த வழக்கை பஞ்சாலை முதலாளிகள் நடத்தினர்.நான்கு தோழர்களும் குற்றவாளிகள் எனவும், மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து தனது வர்க்க பாசத்தை நிரூபித்தது ஆங்கிலேய அரசின் நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட அன்றைய நடைமுறையில் லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கு இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான டி.என்.பிரிட் சின்னியம்பாளையம் தோழர்களுக்காக வாதாடினார். ஆனாலும் அங்கு நீதி கிடைக்கவில்லை. தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. வீறு கொண்டு எழுந்து வந்த தொழிற்சங்க இயக்கத்தை பின்னுக்குத் தள்ள, இந்த வாய்ப்பு பயன்படும் என கனவு கண்டனர் பஞ்சாலை முதலாளிகள். தனது உழைப்பை விற்க வந்த தொழிலாளிகளுக்கு அரசியல் அறிவை ஊட்டி, வர்க்க உணர்வையும் ஊட்டி போராட்டக்களத்தில் நிற்க வைத்த செங்கொடி சங்கம் அவர்களை அச்சுறுத்தியது. மூலதனத்தின் கோரப்பசிக்கு உழைப்பாளி மக்கள் இரையாவதை தடுப்போம் என்று எழந்து நின்ற சங்கத்தை எதிர்கொள்ள எல்லா வழிகளையும் முதலாளிகள் கடைப்பிடித்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் துணை போனது.1946 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டது.

தூக்கு மேடை ஏறுவதற்கு முந்தைய நாள், தொழிற்சங்க தலைவர்கள் பி.ராமமூர்த்தி, எம்.பூபதி, கே.ரமணி ஆகியோர் சின்னியம்பாளையம் தோழர்களை சந்தித்தனர். கண்ணீரோடு போன தலைவர்களை பார்த்து, நம்பிக்கையோடு பேசிய நான்கு தோழர்களும், “செங்கொடியும், கம்யூனிச லட்சியமும் தான் உலகில் வெற்றிபெற போகின்றது. எங்களை அழிக்க சதி செய்த ஏகாதிபத்தியமும், முதலாளி வர்க்கமும் தகர்ந்து வீழப் போகின்றது” என்று நம்பிக்கை விதைத்தார்கள்
“தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் எங்கள் நால்வர் உடல்களை ஒரே குழியில் அடக்கம் செய்யுங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்கள். 1946 ஆம் ஆண்டு ஜனவரி 8இல் நான்கு தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர். தகவல் அறிந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோபாவேசத்தோடு திரண்டு வந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். தோழர்களின் இறுதி விருப்பத்தின் படி ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து சின்னியம்பாளையத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இச்சம்பவத்திற்கு பிறகு அணி அணியாய் செங்கொடி தொழிற்சங்கத்தில் இணைந்தனர். பஞ்சாலைகளில் போராட்டமும் தீவிரமடைந்தது. பஞ்சாலைத் தொழிலாளர் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்ற ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் போராட்டம் 1946 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் நடைபெற்றது.தொழிற்சங்க இயக்கம் பலப்பட பலப்பட, மறுக்கப்பட்ட பல உரிமைகளை தொழிலாளர்கள் போராட்டங்களின் மூலம் பெற முடிந்தது.நான்கு தோழர்களின் வீரமரணம் தொழிற்சங்க இயக்கத்திற்கு உரமாய் அமைந்தது. துவக்கத்தில் கூறிய புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த இடத்திற்கு வருவோம்.அங்கு பணியாற்றுவோர் மட்டுமல்ல, நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் கோவையில் பல்வேறு இடங்களில் பணிபுரிபவர்கள்.பெரும்பாலும் நிரந்தர வேலையோ, சட்டப்பூர்வ ஊதியமோ கிடைத்திடப் பெறாதவர்கள் தான்.இன்று இந்தியாவில் 92 சதவீதம் பேர் ஒப்பந்த பணி அல்லது நிரந்தரமற்ற பணிகளில் உள்ளவர்கள் தான்.8 சதவீத தொழிலாளர்களே சமூகப் பாதுகாப்புடன் கூடிய நிரந்தர வேலைகளில் உள்ளனர்.
சமூகப்பாதுகாப்புடன் கூடிய நிரந்தர வேலை என்பது, சின்னியம்பாளையம் தோழர்களை பல பல தோழர்களை களப்பலி கொடுத்த போராட்டங்கள் மூலம் பெறப்பட்டது.ஆனால் 1991 க்கு பிறகு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த புதிய பொருளாதர கொள்கைகள் கண்மூடித்தனமான பெரும் லாபத்தை நோக்கமாக கொண்டவை. அந்த நோக்கத்தை அடைவதற்கேற்ப எல்லாமே மாற்றப்பட்டது. கல்வியும், மருத்துவமும் தனியார் மயப்படுத்தப்பட்டு, வியாபாரம் ஆனது.

நிரந்தர வேலை வாய்ப்புக்கள் சுருக்கப்பட்டன. நீண்ட கால அடிப்படையில் லாபம் தரும் உற்பத்தி துறையின் மீதான கவனம் குறைக்கப்பட்டு, உடனடி லாபம் தரும் சேவை துறையை நோக்கி திருப்பப்பட்டது. விளைவு இன்று கோவை மாநகருக்குள் பஞ்சாலைகளை தேடினாலும் கிடைக்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.பெரும் ஆலைகள் எல்லாம் சிறு, சிறு அலகுகளாக மாற்றப்பட்டு, புறநகர் மற்றும் கிராம பகுதிகள் நோக்கி கொண்டு செல்லப்பட்டுவிட்டன. நிரந்தர வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டு,‘ சுமங்கலித்திட்டம்’ திருமணத் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. மிகக் குறைந்த சம்பளம், உரிமைகள் மறுப்பு என உழைப்பாளிகள் நவீன கொத்தடிமைகளை போல நடத்தப்படுகின்றனர். தற்போது ஆட்சியிலுள்ள மோடி அரசு இந்த கொடுமைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கும் வகையில், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி வருகிறது.

பஞ்சாலைத் தொழிலில் திரட்டப்பட்ட மூலதனம் இன்று பல்வேறு தொழில்களில் பாய்கிறது. பஞ்சாலைகள் இருந்த இடங்களில் பெரு வணிக வளாகங்கள். உணவகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் என வந்து விட்டன.அங்கும் உரிமைகள் மறுக்கப்பட்ட பெரும் கூட்டம் பணியாற்றுகிறது. இன்றைய உலகமயச் சூழல் உருவாக்கியுள்ள வேலைச் சூழலும், சமூகச் சூழலும் தரும் மன அழுத்தத்தை போக்க அதே உலகமயம் புத்தாண்டு கொண்டாட்டம், தியானம், யோகா போன்ற நிகழ்வுகளையும் அவ்வப்போது உற்பத்தி செய்கிறது. வாழ்வின் நெருக்கடி குறித்தும் அதற்கான தீர்வு குறித்துமான தீவிர சிந்தனைகள் உற்பத்தியாகாமலேயே பார்த்துக் கொள்கிறது.மதவெறி, சாதிவெறி அரசியல் இந்த வேலைக்கு துணை போகிறது. இப்போது புதிதாக ‘ஆன்மிக அரசியல்’ வேறு வந்துவிட்டது. சின்னியம்பாளையம் தோழர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வேளையில், இன்றைய இளம் தலைமுறைக்கு அந்த வரலாற்றை போதிக்க வேண்டும். வாழ்வின் துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியாமல் அழுத்தும் உலகமய நுகத்தடியை முறிக்கும் ஆற்றல், சின்னியம்பாளையம் தோழர்கள் உயர்த்திப் பிடித்த செங்கொடிக்கு உண்டு என்பதையும் சேர்த்து சொல்லித் தர வேண்டும். கட்டுரையாளர் : சிபிஐ(எம்) கோவை மாவட்டக் குழு உறுப்பினர்

Leave A Reply

%d bloggers like this: