பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்களன்று துவங்குகிறது. போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம், ஒக்கி புயல் பாதிப்பு, மத்தியில் உள்ள மோடி அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து இழைத்து வரும் அநீதி என பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றிச்சுழன்று வரும் நிலையில் சட்டப்பேரவை கூடுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை முறைப்படி நிரூபிக்காத நிலையில் ஆளுநரின் தயவில் தான் இந்த ஆட்சியே நடந்து வருகிறது. சபாநாயகர் மூலம் ஆளுங்கட்சியை எதிர்ப்பவர் களை தகுதிநீக்கம் செய்வது போன்ற சித்து வேலைகள் மூலம்தான் இந்த அரசு நீடிக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரை இடம்பெறுவது வழக்கம். ஆனால் இப்போது தமிழகத்தில் இருப்பவர் வழக்கமான ஆளுநர் அல்ல. அதிமுக அமைச்சர்கள் பாணியில் சொல்வதானால் ‘மக்கள் ஆளுநர்’.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை இழிவுபடுத்தும் வகையில் பல்வேறு ஊர் களுக்குச் சென்று நேரடி ஆய்வுகள் நடத்துபவர். அமைச்சர்களை புறக்கணித்துவிட்டு அதிகாரி களுடன் ஆலோசனை நடத்துபவர். இந்த நிலையில் ஆளுநர் அவையில் தனது சொந்த உரையை நிகழ்த்தப்போகிறாரா? அல்லது மாநில அரசின் சார்பில் எழுதி தரப்படும் உரையை வாசிக்கப்போகிறாரா? என்கிற கேள்வி எழுவது இயல்பே. மரபை மீறி ஆளுநர் சொந்தமாக பேசினால் கூட அதற்கு முட்டுக்கொடுக்க அதிமுகவினரே தயங்கமாட்டார்கள். இதுதான் அவர்களின் லட்சணம். போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டி ருக்கிறார்கள். மாநில அரசோ கருங்காலிகளை வைத்து வேலைநிறுத்தத்தை உடைக்க முயன்று தோற்று நிற்கிறது. மக்களின் ஆதரவோடு நீதிக்கான இந்த வேலைநிறுத்தம்தொடர்கிறது. தொழிலாளர்களின் நியாயத்தை சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் அழுத்தமாக எடுத்துவைக்க வேண்டியது அவசியமாகும். அவைக்குள் தருகிற அழுத்தம் அரசை அசைப்பதாக இருக்க வேண்டும். ­­­

ஒக்கி புயல் பாதிப்பால் ­­­­­தென் மாவட்டங்கள் நிலை குலைந்துள்ளன. மாநில அரசின் நிவாரணப் பணிகள் போதுமானதாக இல்லை. மத்திய மோடி அரசு அள்ளி தராவிட்டாலும் பரவாயில்லை. கிள்ளித் தரக்கூட மறுக்கிறது. மீனவ மக்களின் கோபக் குரல் சட்டப்பேரவை யிலும் எதிரொலிக்க வேண்டும். இறக்குமதி மணல் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்தில் விவாதிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்தெல்லாம் ஆக்கப் பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும். மத்திய அரசின் ஆதரவு தேர்தல் ஆணையத்தின் அனுசரணை காரணமாக இரட்டை இலை சின்னம் கிடைத்தும் ஆர்.கே. நகர் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் கூடும் சட்டப்பேரவை அவர்களுக்கு உவப்பானதாக இருக்க வாய்ப்பில்லை. மக்கள் பிரச்சனைகளை பேசும் மன்றமாக சட்டப்பேரவை இருக்க வேண்டும். மாறாக வழக்கமான லாவணிக் கச்சேரியாக மாறிவிடக்கூடாது.

Leave A Reply