ஆதிகாலத்தில் வேட்டை சமுதாயம், வேளாண்மை சமுதாயம் என இரு பிரிவுகள் இருந்தது. விலங்குகளை வேட்டையாடி அதைத் தாங்கள் நம்பிய கடவுளுக்கு படைத்துக் கொண்டாடினார்கள். நீருக்கு வடிவம் மாரி – மழை. நல்ல மழை வேண்டும் என குளத்திலிருந்து செம்பில் நீரை எடுத்து அதற்கு வேப்பில்லை சுற்றி தலையில் வைத்து ஆடி வந்து, கடவுளுக்கு செலுத்துதல் ஒரு கலை. பின்பு அந்த கலையை கூத்தாக மாற்றி நடித்து காட்டினர்.
நமது நாட்டுப்புறக்கலைகளில் கரகாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், சிலம்பாட்டம், கழியல் ஆட்டம், கணியன் கூத்து, ஒவியம், சிற்பம், ராஜா ராணி ஆட்டம், புலியாட்டம், கைச் சிலம்பாட்டம்,குறவன் குறத்தி ஆட்டம்,செவ்வியல் கலைகள்,தோல் பாவை கூத்து, மாடு ஆட்டம் என பல கலைகள் இன்றளவும் நிகழ்த்துக் கலையாக இருக்கின்றன.

இதில் கரகாட்டம் ஒரு காலத்தில் சக்தியின் வடிவமாக அது சக்தி கரகமாகவே போற்றப்பட்டது. எந்த மாரியம்மன் கோவில் திருவிழாவானாலும் சக்தி கரகம் இடம் பெறாமல் இருந்ததில்லை. தமிழினத்தின் தொன்மைக் கலை வடிவம் அது. கடுமையான பயிற்சிக்குப் பிறகே கரகப் பெண்மணிகள் களத்தில் ஆட முடியும். கிராமிய கலையும் சினிமாவும்பழைய சினிமாக்களில் கலையை குறிப்பாக கிராமிய கலையை சினிமாக்களில் காட்டியிருப்பார்கள்.

‘’வண்ணக்கிளி’’-யில் சித்தாடை கட்டிக்கிட்டு… சிங்காரம் பண்ணிக்கிட்டு…தொடங்கி ‘’தாரை தப்பட்டை’’ வரை என இன்றளவும் எல்லா கிராமக் கோவில் திருவிழாக்களிலும் இசைத்து பாடப்படுகிறது. பின்பு தேரோடும் வீதியிலே…என ஒயிலாட்டம் ஆடினார்கள். பின்பு டைட்டில் போடும் போது கலைஞர்களை ஆட வைத்து அவர்களின் கலைப்பொருட்களை மட்டும் காட்டிக் கொண்டிருந்தனர்.இப்படியாக வந்த கலை 1989ல் ‘‘கரகாட்டக்காரன்’’ மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஒயிலாட்டம், என் ஆசை ராசாவே…என வெளிவந்திருந்தாலும் ‘’பருத்தி வீரன்’’ மூலமாக இவர்களின் வாழ்க்கை ஏதோ ஒரு சமுதாயத்தில் இணைந்திருப்பது அறியப்பட்டது. இறந்த வீட்டில் ஆடப்படும் மட்டை கூத்துவை ‘மதயானை கூட்டம்’ படத்திலும், தற்போது வெளிவந்த ‘தர்மதுரை’ படத்திலும் மிக இயல்பாக காட்டி இருப்பார்கள்.

இதற்கு விதிவிலக்கு ‘தாரை தப்பட்டை’ படம். இந்த கரகாட்ட கலைஞர்களைப் பற்றி என்ன தெரியும் என்று…. எந்த தைரியத்தில், என்ன சொல்வதற்காக அந்தப் படத்தை எடுத்தார்களோ தெரியவில்லை. என்னதான் பெரிய கலைமாமணி விருது பெற்ற கிராமிய கலைஞர்களாக இருந்தாலும் 3 மணிநேரம் ஒடக்கூடிய திரைப்படத்தில் ஒரு நொடிக்கும் குறைவானது முதல் 5 நொடிக்குமேல் அவர்களை காட்டியதில்லை. நாயகனும், நாயகியும் கேமரா முன்பாக அசைந்துகொண்டிருக்க 15 அடி துரத்தில் உண்மையான கலைஞர்கள் ஆடிக்கொண்டிருப்பார்கள். அல்லது அவர்கள் வைத்திருக்கும் கரகச்செம்பு, மயில் போன்றவைகள் மட்டும் திரையில் தெரியும்படி பார்த்துக்கொள்வார்கள். கலைஞர்களும் அவர்களின் மொழியும்இந்த நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கென ஒரு மொழி இருக்கின்றது.

இவர்களுக்கென்று ஒரு பேசும் மொழி இருக்கிறது தெரியுமா? சாதாரணமாக ஒரு இழவு வீட்டில் இவர்கள் பெண் மற்றும் மேளக்காரர்களை ‘‘மட்டைக்கு வாசிக்கிற ஆட்கள்’’ என்று தான் சொல்வார்கள். அங்கு ஆடும் விதமே தனி. (சூகை என்றால் அவர்கள் வாங்கும் ஊதியம், கரவன்:=வேஷம் போட்டு ஆடும் ஆண் கலைஞர்கள், சிந்தை:=ஆடும் போது ஏற்படும் சிறு சச்சரவு)இந்த கலையில் பாதிக்கு பாதி பேர் திருநங்கை களும், கோத்திகளும் (இந்த வார்த்தையை கேள்வி பட்டிருக்கிறீர்களா?=திருநங்கை ஆவதற்கான முந்திய நிலை), தாழ்த்தப்பட்டவர்களும் தான் இருக்கிறார்கள். அரசு சுற்றுலா துறை நடத்தும் நிகழ்ச்சிக்குப் போனால் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு 500ரூபாய் மட்டுமே. எந்த ஊரில் நிகழ்ச்சிக்குப் போனால் ஒப்பனை செய்துகொள்ள, உடை மாற்ற நன்கு திரை கட்டிய அறை தருகிறார்கள்? வேற்று சாதியினரும் இந்த கலையை முறையாக கற்று தொழில் செய்து வருகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இணைகளைக் கலப்பு திருமணம் செய்து போனவர்களும் உண்டு. நாகப்பட்டினத்தில் ஒரு இஸ்லாமிய கிராமிய கலைஞர் இந்த கலையை கற்று பேணி பாதுகாத்து வருகிறார்.பலர் ஒரு கட்டாயத்தால் இரட்டை அர்த்த வசனம் பேசினாலும் ஒழுக்கமாக இருந்து கரகாட்டம் ஆடிய கலைஞர்கள் ஆயிரம் உண்டு. அதில் புதுக்கோட்டை திலகவதி, திருவப்பூர் மாரிக்கண்ணு, குளித்தலை தனம், பொன்னமராவதி கல்யாணி, தஞ்சை மாலா, மதுக்கூர் மல்லிகா, தஞ்சாவூர் ராணி,

உள்ளிக்கோட்டை சொர்ணம் இப்படி நீண்டுகொண்டேபோகும் கரகப்பெண்மணிகள் ஒருகாலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கரகாட்ட நாயகிகள். புதுக்கோட்டை கல்யாணி, தஞ்சை தேன்மொழி ராஜேந்திரன், மதுரை சுலோச்சனா, அலங்காநல்லூர் பாண்டியம்மாள், கலைமாமணிலட்சுமி, பார்வதி என நீண்ட வரிசை இருக்கிறது. ‘‘ஆம்பள மட்டும் ஆடுனா யாரும் பாக்கமாட்றாங்க’’ என்று பார்வையாளர்களின் கவனத்தை திருப்ப தனி ஆளாக நிறைய வித்தைகள் செய்து 70 வயதாகியும் இன்னும் ஆடிக்கொண்டிருக்கும் மதுரை ஒத்தக்கடை ராஜூ, காஞ்சிபுரம் புலி கோபால், மயிலாட்டம் ஆடும் மதுரை-வாடிப்பட்டி ராயர் போன்ற முன்னுதாரணக் கலைஞர்கள் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகின்றார்கள்.‘சீஸன் டைம்’ என்று சொல்லக்கூடிய மாசி மாதம் முதல் ஆடி வரை திருவிழா நேரத்தில் ஒரு பெண் கலைஞர் கருத்தரித்தால் அந்த கருவை கலைத்து விட்டு ஆட செல்வார்கள்.

அரசும் கலைஞர்களும்வாழ்வியல் இருத்தலுக்கான போட்டியில் பலர் கரகத்துடன் சேர்ந்து ஆபாசத்தையும் சுமக்க வேண்டியுள்ளது. ஆடையைக் குறைத்து ஆபாசமாகத்தான் ஆடுவேன் என்று எந்த கரகப் பெண்மணியும் அடம் பிடிப்பதில்லை. ஒவ்வொரு கரகாட்டக் கலைஞரும் வறுமை நிறைந்த சூழலிலேயே உள்ளனர். இவர்களுக்கு அரசுத் தரப்பில் போதுமான உதவித் தொகை வழங்கப்படவேண்டும், இந்தக் கரகாட்டம் பற்றி தகுதி பெற்ற கலைஞர்களைக் கொண்டு முறைப்படி பயிற்றுவிக்க பயிற்சி மையங்களையும் அரசே முன்னின்று நடத்த வேண்டும். கரகாட்டம் எல்லை மீறாமல் இருப்பதை கலைஞர்கள் உறுதிசெய்ய வேண்டும். இப்படிப்பட்ட நம் கலையை பாதுகாக்கவும், கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் கலைப் பண்பாட்டுத்துறை கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1959 முதல் இயங்கி வருகின்றது.

இதன் கீழ் வரும் ‘‘கலைபண்பாட்டுத் துறை’’ ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்டல கலைபண்பாட்டு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் ஒவ்வொரு மையத்திலும் ஒரு துணை இயக்குநர் இருக்கிறார்.தமிழ்நாட்டில் இந்த துறை காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை மற்றும் நெல்லை என ஆறு மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டல அலுவலகங்கள் துணை மற்றும் உதவி இயக்குநர்கள் பொறுப்பில் செயல்படுகின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு கலைகளிலுமே ஒரு சிலரே திறமையானவராக இருக்கின்றனர். காரணம் வறுமைக்கு வாக்கப்பட்ட இந்த கலைஞர்களை இந்த தமிழக அரசு அடுத்த கட்டத்திற்கு இதை கொண்டு செல்லாமலும், ஆவணப்படுத்தாமலும், வளரும் அவர்களின் வாரிசுகளுக்கும், வெளிச் சமுதாயத்தினர்க்கும் கற்றுக்கொடுக்காமலும் இந்த கலைஞர்களை ஊக்குவிக்காமலும் ஒரு மெத்தனப் போக்காக இருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

இந்த கலைப் பண்பாட்டு மண்டலத்தின் முக்கிய பணி நாட்டுப்புற கிராமிய கலைஞர்களை தமிழக அரசின் பல்வேறு துறையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், சுற்றுலா துறை மூலம் நடக்கும் கலைநிகழ்ச்சி, மத்திய மற்றும் மாநில அளவில் நடக்கும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சிகளுக்கும்,வெளிநாட்டு பயணிக்களுக்கான பொங்கல் விழாவிற்கும் ஒருங்கிணைத்து அனுப்புவது. கலைஞர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நாட்டுப்புற நல வாரியம் அட்டை வழங்குதல் என நிறைய உள்ளது. அதில் ஒன்று விருதுகள் வழங்குவது. 1959 ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கி 2010ல் தமன்னா, அனுஷ்கா என இதுவரை சுமார் 1079 பேருக்கு தான் கலைமாமணி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த திமுக அரசு 2010ல் மாநில விருதான ‘’கலைமாமணி விருது’’ விழா வைத்து கொடுத்ததோடு சரி. அதற்கு பின் வந்த அதிமுக அரசு 7 வருடமாக எந்தவொரு கலைஞருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கவில்லை. அரசியல் கட்சிகளில் நாட்டுப்புற கலைஞர்களையும் தொண்மைக் கலைகளையும் பாதுகாப்பதில் அக்கறை உள்ளவர்கள் யார் என்பது தெரிந்ததே…இந்த தமிழக அரசு ஆறு வருடமாக கலைமாமணி விருது (மாநில விருது), கலைவளர்மணி, கலைச்சுடர்மணி விருதுகள் கூட (மாவட்ட அளவிலான விருது) அறிவிக்கவில்லை. இப்படி இரண்டு பிரிவாக விருது இருக்கிற விஷயமாவது அவர்களுக்கு தெரியுமா? இன்னும் ஒரு கிராமிய கலைஞன் கூட தேசிய அளவில் விருது வாங்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு விருதுகள் மறுக்கப்படுகிறது.

நர்ஸ்சிங், பொறியியல், ஆடிட்டர் போன்ற பட்டம் பெற்றவர்களும் இந்த கலையில் இருக்கிறார்கள். எந்த ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சி வந்தாலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் (இது எங்களுக்கான தலைமை அலுவலகம்) ஒரு இடைத்தரகர் இருந்து தட்டிப் பறித்து பணம் பார்த்துக்கொண்டிருக்கிறார். கலைஞர்களுக்கான தீர்வுஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிகள் அதிகரித்தா லும், போலீஸாரின் கெடுபிடிகள் காரணமாகவும் பல விழாக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதே இல்லை. கலைப் பண்பாட்டு மையமும் ஆட்கள் பற்றாக்குறையால் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. மாதத்தில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள்தான் வருகின்றன.

எடுத்துக்காட்டாக மதுரையில் மிக முக்கியமான விழாவில் ஒன்று சித்திரைத் திருவிழா. இந்தத் திருவிழாவில் ஆடி வீதிகளில் ஆடி வருவது கேரளப்புகழ் செண்டை மேளம். அதன் சிறப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை என்றாலும், உள்ளூர்க் கலைஞர்களை உள்ளூர் மக்களே மதிக்கவில்லையெனில் வேறு யார் மதிப்பார்கள்? இதோ மாசி முதல் ஆடி வரை, இப்போது தான் இந்த கலைஞர்கள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய அழைப்பார்கள். சுற்றுலாத் துறையும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், பெரிய நிறுவனங்களும் ‘கெட் டுகெதர்’ என்று சொல்வார்களே, அது போன்ற சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்ய கலைஞர்களை தேடுகிறார்கள்.பள்ளிப் பாடப் புத்தகத்தில் இந்த கலையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், வருடந்தோறும் நடக்கும் அரசு விழாக்களில் மற்றும் புத்தகக் கண்காட்சிகளில் கட்டாயமாக இந்த கலைகளை, கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதும்,அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த கலைப்பயிற்சியை ஒரு பாட வேளையாயினும் கட்டாயப்படுத்துவதால் எதிர்கால சந்ததிக்கு நாட்டுப்புறக் கலையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். இதனால் கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தலாம். இனிமேல் வரும் இளைய சமுதாயத்தினர் பற்றி யாருக்கும் கவலையில்லை.

அநேகமாக இந்த நாட்டுபுறக் கலையைப் பற்றி தெரிந்த கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். நமது பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் இனி வரும் காலத்தில் அருங்காட்சியகத்தில் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை மாதிரிகளை பார்த்துவிட்டு ‘‘ஒ இதுதான் கலையா’’ என்று பார்த்து விட்டுப் போவார்கள்.தண்ணியடிக்கிறதும், இரட்டை அர்த்த வசனம் பேசுவதும் எங்கள் இயல்பல்ல. அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கிறது. ஆடும் போது வலது பக்கத்தில ரூபாய் நோட்டு குத்துகிறேன் என்று, இடது பக்க மார்பை பிடிச்ச கதையும், ஆடுகிற ஆணையும் ‘‘ஒழுங்க ஆடுறா பொண்டுகா,’’ என்று சொல்லி எங்கள் மனதை புண்ணாக்கிய கதையும், ஆட வந்த திருநங்கைகளை அவிழ்த்துப் பார்த்த கதையுமாக ஆயிரம் இருக்கு.ரசிகரின் தேவை அறிந்தும், சக கலைப்போட்டி களை சமாளிக்கும் திராணிக்காகவுமே கரகாட்டத்தில் ஆபாசம் அமர்ந்துவிட்டது என்ற வாதத்தில் உண்மையிருந்தாலும், தமிழரின் தொன்மக் கலையை தொலைப்பதற்குக் கலைஞர்கள் துணை போய்விடக்கூடாது. வருடம் ஒரு முறை மட்டும் இவர்களின் திறமைகளை சொற்ப வருமானத்திற்கு பயன்படுத்தாமல், வருடம் முழுவதும் பயன்படுத்தி அந்த கலை மீதும், அந்த கலைஞர்கள் மீதும் நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் கலைஞர்கள் வளர்வார்கள், அதன்மூலம் இந்தக் கலையும் வளரும். நல்லா சத்தமா ஒப்பாரி ராகத்துல பாடி பாருங்க……

‘‘ஆட பொறந்த நாங்க இப்போ அநாதையா திரியிறோங்க…நாங்க சீவி சிங்காரிச்சும் இப்படி மூளியா திரியிறோங்க…நாங்க இரவைகெல்லாம் ராசாவாம் பகலுல கூலியாம்…எங்க கலைமாதா கூடருந்தும் கால் வயித்து கஞ்சிக்கில்லஇப்படி முள்ளு பட்ட சேலை போல முழுசா கிளிஞ்சோம்ங்க.’’கட்டுரையாளர் ஒரு கரகாட்டக் கலைஞர், சேது பொறியியல் கல்லூரி பேராசிரியர். மின்னஞ்சல் முகவரி: அனரளஅயடயi@லயாடிடி.உடிஅ

கலைச்சுடர் மணி மதுரை எஸ். மலைச்சாமி எம்.இ. (பி.எச்டீ)

Leave a Reply

You must be logged in to post a comment.