ஈரோடு, ஜன.6-
ஆளுங்கட்சியின் பொய் பிரச்சாரத்தை புறம்தள்ளி, கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎம் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் 11 ஆவது மாவட்டமாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர்சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஈரோடு மாநகருக்கு மாசற்ற குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைத்திட வேண்டும். கிராமப்புற நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, அதனை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிபடுத்த வேண்டும்.

மேலும், நீர்நிலை புறற்போக்குகளில் குடியிருக்கும் மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வழங்கப்பட்டுள்ள உத்தரவினை அமல்படுத்தும் முன்பு, ஆய்வுக்குழு அமைத்து முறையாக ஆய்வு செய்து நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்தால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதுடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும். அதேநேரம், நீர் நிலை புறம்போக்கு இல்லை என ஆய்வுக்குழு கருதினால், அவர்களுக்குவீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.8 ஆம் தேதியன்று மாவட்டம் முழுவதும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டமும் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கங்களும், போராட்ட களத்திற்கு மக்களை திரட்டுவதற்கான பணிகளும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீர் நிலைப் புறம்போக்கில் உள்ளவர்களை அரசு அகற்றப் போவதில்லை. ஆகவே, யாரும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என ஆளும் கட்சியின் சார்பில் தவறான தகவலை அளித்தும், மிரட்டல் விடுத்தும் வருகிறார்கள்.
ஏற்கனவே, ஈரோடு தாலுகாவில் கதிரம்பட்டி, கண்ராத்தான்குளம், ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு, மூலப்பாளையம் பெட்ரோல் பங்கு, சென்னிமலை ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது திண்டல் காரப்பாறை, செங்கோடம் பள்ளம், சூரம்பட்டி பாரதிநகர், பூந்துறை ரோடு போன்றபல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுங் கட்சியினர் மக்களை வழக்கமாக ஏமாற்றுவதுபோல், ஏமாற்றும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

எனவே, அவர்களின் பொய் பிரச்சாரத்தை நம்பி ஏமாறமல் ஜன.8 ஆம் தேதியன்று மாற்று இடம் கேட்டு நடைபெறும் மனு அளிக்கும் போராட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.