டூட்டி முடிக்க இன்னும் இரண்டு மணிநேரத்திற்கு மேல் உள்ளது.முருகேசன் தனது மனைவி சொன்ன அந்த விசயத்தை கேட்டதிலிருந்து வேலை பார்க்கும் ஆர்வமே குறைந்து இரண்டு நாட்களாக மன உளைச்சலாகவே இருந்தார்.வழக்கம் போல இந்த நேரத்தில் பஸ்சில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். மொத்த டிக்கெட் விபரங்களை செக்லிஸ்ட்டில் எழுத ஆரம்பித்தார் முருகேசன். ஓய்வு பெற சில வருடங்கள் இருந்தும் சற்று முதிர்ந்த தோற்றம்.
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளைக் கடிந்துகொள்ளாத, எரிந்து விழாத சில கண்டக்டர்களில் முருகேசனும் ஒருவர்.என்னென்னமோ மனதில் ஓடிக்கொண்டு இருந்தாலும் பயணிகளை ஒரு பார்வையில் அளந்துவிடுவார். ஒரு எட்டு பேர்தான் இருந்தனர். பேருந்து மாநகருக்குள் போகும் அதே தாலாட்டு வேகம். அப்போதுதான் நன்கு கவனித்தார் பெண்கள் இருக்கையில் கடைசியில் ராணி. ‘ஒருவாரமாக ஆளயே காணோம் இப்பவும் ராணி மட்டும் தான் இருக்கா முத்துவக் காணோம்,’ என எண்ணிக்கொண்டே சற்று புத்துணர்வு பெற்றவராய் ராணியின் அருகில் சென்றார்.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் இரண்டு பெண்களும் முருகேசனை உரிமையுடன் “என்னப்பா இன்னக்கி டூட்டி ஓவரா” என்று ஆரம்பித்து அப்படி இப்படி என ஒரு கலாய் கலாய்த்துவிடுவார்கள். அதை முருகேசன் தனது வேலைப் பளுவில் ஒரு இளைப்பாறுதலாய் ஏற்றுக்கொள்வார்.ஆனால் கடந்த ஒரு வாரமாக இருவரும் பஸ்ஸில் வரவேயில்லை. ஏன் என கேட்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் சந்தோசத்திலும் ராணியிடம் சென்று “ஏம்மா சீட்டு” என்றார் பதிலே இல்லை. “ஏம்மா உன்னத்தான் சீட்டு வாங்கிட்டயா” என்றார் ஜன்னல் பக்கம் திரும்பி இருந்த ராணி உணர்வற்றவளாய் அசையாமல் இருந்தாள்.

முருகேசன் மெதுவாக ராணியின் தலையை தொட்டு “என்னமா ராணி தூங்குறியா” என்றார். அப்போதுதான் ராணி மெதுவாக திரும்பினாள். முருகேசனுக்கு அதிர்ச்சி. ராணி கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. ராணி முருகேசன் முகத்தை பார்த்ததும் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்!.முருகேசனுக்கு ஒன்றும் புரியவில்லை ” ஏம்மா ஏன் அழுற? சொல்லுமா ராணி என்னாச்சு தாயி ?’’பதிலே இல்லை. சரியாக கடைசி ஸ்டாப் வந்தது அனைவரும் இறங்கி விட்டனர். நான்கைந்து முறை கேட்ட பின்பு அழுகையுடனும் கட்டிய தொண்டையுடனும் “அப்பா முத்துச்செல்வி செத்துட்டாப்பா… அவளக் கொண்ணுட்டாங்கப்பா… என் முத்து செத்துட்டாப்பா!…’’ என சொல்லி கதறி அழுதாள் ராணி.முருகேசனுக்கு அதிர்ச்சியின் உச்சத்தில் மூர்ச்சையடைவது போலிருந்தது.. முத்துச்செல்வி மாநிறம் அன்பு கனியும் முகம்,முருகேசனுடன் அப்பா அப்பா என உரிமையுடன் பழகியவள்.

முருகேசனின் மகளை ஒத்த வயது. படிப்பை முடித்துவிட்டு சிப்காட்டில் ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்த முத்துவும் ராணியும் இணை பிரியா தோழிகள். கடந்த மூன்று ஆண்டுகளாக முருகேசனின் பஸ்சில்தான் வருவார்கள். முதன் முதலில் வந்தபோது சிறுவயதிலேயே தந்தையை இழந்த ராணி முத்துவிடம் “இந்த கண்டக்டர் எங்க அப்பா மாதிரியே இருக்காருல” என்று சொல்ல முத்து டிக்கெட் எடுக்கும்பாது “அப்பா சிப்காட் ரெண்டு குடுங்கப்பா” என்றாள். முருகேசனும் “வாங்கிக்க மகளே!” என்றார்””ஏ என்னடி இப்படி பண்ணிட்ட” என அதிர்ந்தாள் ராணி.

ஆனால் முத்து செல்வியோ மிகச் சாதாரணமாக “உனக்கு அப்பானா எனக்கும் அப்பாதான்” என்றாள். இப்படித்தான் பேருந்தில் ஆரம்பமானது அவர்களின் உறவுப் பயணம். முத்துசெல்வியின் முகமும் பேச்சும் முருகேசனின் கண்முன் வந்து சென்றது.தாங்க முடியாத சோகத்தை உள்ளடக்கிக்கொண்டு கண்களை துடைத்துக்கொண்டு “எப்படிமா? என்னமா ஆச்சு,” என மெதுவாக கேட்டார்.ராணியை பிஸ்கட் கம்பெனியில் வேலைக்கு சேர்த்தவர் ராணியின் பெரியப்பா பையன் சுரேஷ். ராணியை விட ஒன்றிரண்டு வயது மூத்தவன். ராணியின் குடும்பத்தில் முதல் பட்டதாரி அவன்தான். சுரேஷ் அதே கம்பெனியில் சூப்பர்வைசராக இருக்கிறான்.முத்துச்செல்வியும் வீட்டில் பிடிவாதம் செய்து ராணியுடன் வேலைக்கு செல்ல அனுமதி பெற்று வேலைக்கு சென்றாள்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் ஒரே மகள், அதுவும் கடைக்குட்டி என்பதாலும் செல்லப்பிள்ளை. எனவே அவள் இஷ்டம்போல் இருக்கட்டும் என வேலைக்குப் போக அனுமதித்தனர். இருப்பினும் அவள் அண்ணன் முத்துப்பாண்டிக்கு அது பிடிக்காமலே இருந்தது. ராணி சுரேஷ் அண்ணனிடம் கேட்டு வேலைக்கு சேர்த்தாள். முத்துசெல்வி அனைவரிடமும் எளிதில் ஒட்டிக்கொள்வாள். மிக இயல்பாக குறும்பாகவும் நடந்துகொள்ளும் முத்துச்செல்வியை எல்லோருக்கும் பிடிக்கும் சுரேஷ்சுக்கும்தான்.கம்பெனியில் சேர்ந்து நான்கு மாதத்திலேயே சுரேஷ் முத்துச்செல்வியை உள்ளூர விரும்ப ஆரம்பித்தான். ஒரு வழியாக இரண்டு ஆண்டுகள் கழித்துக் காதலின் உண்மையை உணர்ந்தவளாய் ஏற்றாள் முத்துசெல்வி. இந்த விசயம் சிப்காட்டில் வேலைசெய்த சில உறவுக்காரர்களால் முத்துப்பாண்டியின் காதுக்கு சென்றது. மறுநாள் சுரேஷை அடையாளம் தெரியாத சிலர் தாக்கி கைகளை உடைத்தனர். இப்போதுதான் முத்துசெல்வியின் காதல் மேலும் அதிகமானது அடிக்கடி சுரேஷை யாருக்கும் தெரியாமல் நேரில் வீடுக்குசென்று பார்த்துவந்தாள்.ஒருநாள் அவள் வீட்டில் இருந்தபோது அம்மாவும் தாய்மாமனும் “அவங்க மாட்டுக்கறி திண்ணுறவங்க முத்து நம்ம சாமிக்கி ஆகாது,சொன்னா கேளு அப்பறம் வம்சம் அழிஞ்சு குடும்பம் விருத்தியாகாமப் போயிரும்” என்றனர்.

போதாகுறைக்கு தாய்மாமன் “இங்கபாருமா மாமா ஒனக்கு நல்ல மாப்பிள பாத்துருக்கேன். நம்மஆளுகள்லயே நல்ல அந்தஸ்தானவரு. நம்ம மொக்கசாமி பையன். ஒன்னய நல்லா பாத்துகுவான். காடுகறனு ஊருப்பட்ட சொத்து இருக்கு. நான் சரினுட்டு வந்துட்டேன். அக்கா சொல்லக் கேட்டு நடந்துக்க ஆமா,” என்று மிரட்டலாக சொன்னதை கவனித்த முத்துசெல்விக்கு சுரேஷ் மீது இருந்த காதல் ஒரு அங்குலமும் இறங்குவதாக இல்லை. இன்னொருநாள் அப்பா போதையில் இருந்தபோது சக குடிகாரர்கள் வாயிலாக முத்துவின் விசயம் காதுக்கு வர வீட்டில் முத்துவுக்கு கடுமையான அடி உதை, கடைசியில் முத்து தலையில் பத்து தையல் அளவில் முடிந்தது. ஊருக்குள் முத்துசெல்வியின் காதல் பொதுவெளியில் பலரின் பேசுபொருளானது. ராணியையும் ஒருநாள் வீடேறிப் போய் கத்திமுனையில் மிரட்டினான் முத்துப்பாண்டி. அடுத்த ஒருவாரத்தில் முத்துசெல்வி இறந்துவிட்டாள். தீராத வயிற்றுவலியால் இறந்ததாக இறப்புச்சான்றிதழ் வாங்கப்பட்டது.

இவ்வளவு விசயங்களையும் கேட்டுகொண்டிருந்த முருகேசனுக்குச் சடீரெனத் தன் மகள் ஜானுவின் ஞாபகம் வந்தது. ஜான்சியும் முருகேசனுக்கு ஒரே ஒரு மகள் செல்லப்பிள்ளை. முருகேசன் மனைவி மகளின் காதல் பற்றி ஒருநாள் கூறியிருந்தார். முருகேசன் கவனமாக விசாரித்துமிருந்தார். ஜான்சியின் காதலனுடைய சாதியை அறிந்ததிலிருந்தே முருகேசனால் சரியான மனநிலையில் இல்லை. முருகேசனின் சாதிய உணர்வு ஒவ்வொரு நாளும் அவரை வறுத்தெடுத்தது.அழுகையில் தோய்ந்த குரலுடன் ராணி “அப்பா எங்க சாதிக்காரப் பையன்னா காதலிக்கக் கூடாதாப்பா? நாங்க மனுசங்க இல்லையாப்பா? நாங்கெல்லாம் என்ன பாவம் செஞ்சோம்? இப்படி அநியாயமா பெத்தபுள்ளய கொண்ணுப்புட்டு எப்புடி இவங்களால நிம்மதியா வாழமுடியும்?…” என்றவாறு முருகேசனின் மடியில் வீழ்ந்து அழுதாள்.

முருகேசன் வார்த்தையற்றவராய் கண்ணீரை துடைத்துக்கொண்டு ராணியின் தலையில் கைவைத்து வருடி தேற்றினார்.சிறிது நேரம் நிசப்தம் குடிகொண்டது மெதுவாக எழுந்த ராணி கண்களை துடைத்துக்கொண்டு பஸ்சை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்து மறைந்தாள். முருகேசனோ தொண்டை கவ்வியவராய் ராணி மறையும் வரை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டேயிருந்தார்.மீண்டும் பஸ் புறப்பட்டு நகருக்குள் செல்ல ஆரம்பித்தது. நடைபிணமாக முருகேசன் டிக்கெட்டுகளை கிழித்துக்கொண்டிருந்தார். ராணியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முருகேசனின் இதயத்தில் ஆணியாய் அரைந்துகொண்டே இருந்தது. டிரைவர் திடீரென ப்ரேக் போட அனைவரும் நிலைகுலைந்தனர்.

ஜம்பது அறுபது இளைஞர்களும் இளம் பெண்களும் கைகளில் கொடியுடன் சாலையை மறித்தனர்.” கைது செய் கைது செய்!காவல்துறையே கைது செய்!முத்துசெல்வி மரணத்திற்குகாரணமான கயவர்களைகைது செய் கைது செய்! சாதி ஆணவ கொலை செய்தமுத்து செல்வி பெற்றோர்களையும்கூலிபடை நாய்களையும்கைதுசெய்! கைது செய்!’’முழக்கம் விண்ணைப் பிளந்தது. முருகேசன் அப்போதுதான் சற்று சுய நினைவுக்கே வந்தார். சற்று நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முருகேசன் தனது செல்போனை எடுத்து ஜான்சிக்கு டயல் செய்தார். “அப்பா சொல்லுங்கப்பா!”முருகேசன் நிதானமாக பேச ஆரம்பித்தார். “ஜானும்மா, அம்மா எல்லா விசயத்தையும் ஏங்கிட்ட சொன்னாம்மா! அந்த பையன் யாரு பையன் பேரு என்னம்மா? என்ன பண்றாரும்மா?”தெரியாதது போல் விசாரிக்க ஆரம்பித்தார். ஜானு சிறிது படபடப்புடன் பேச ஆரம்பித்தாள். “அப்பா பிரபாப்பா. அம்மாவோட சர்ஜரிக்குக் கூட பிளட் டொனேசன் பண்ணான்லப்பா அவன்தாம்ப்பா!””என்னமா பிரபாவா!””ஆமாம்ப்பா பிரபாகரன்… என்கூட படிச்சான்ப்பா!” ஜானு பேச்சில் இருந்த பூரிப்பை முருகேசனால் உணரமுடிந்தது.”ம் சரிம்மா அவன் நம்பர் குடுக்குறியாமா நான் பேசுறேன்!””அப்பா தாங்ஸ்ப்பா நான் உங்கள நெனச்சுதான் ரொம்ப பயந்துக்கிட்டிருந்தேன்ப்பா! நம்பர நம்பர மெசேஜ்ல அனுப்புறேன்ப்பா. நௌ ஐ மிஸ் யுவர் ஹக்ப்பா!” இதற்கிடையில் போலீஸ் வந்து போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. நான்கைந்து பேர் இளம் ஆண்களும் பெண்களும் போலீசை சுற்றி வளைத்து கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தனர். முருகேசனுக்கு மெசேஜ் வந்தது. முருகேசன் அந்த எண்ணுக்கு டயல் செய்தார். ஃபுல் ரிங் போனது யாரும் எடுக்கவில்லை சற்று நேரம் கழித்து மீண்டும் முயன்றார்.

அட்டென்ட் செய்யப்பட்டது. முருகேசனால் எதிர்முனையில் என்ன பேசுகிறார் என கேட்க முடியவில்லை ஒரே கூச்சல் குழப்பம். மறியலில் கேட்கும் அதே கோஷங்கள் அழைப்பில் மறுமுனையிலும் கேட்டது. முருகேசன் காதில் செல்போனுடன் மெதுவாக பஸ்ஸிலிருந்து எட்டி மறியல் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞன் ஒரு கையில் கொடியுடனும் மறு கையில் செல்போனுடனும் தனியாக வருவதைக் கவனித்தார் முருகேசன். போனில் குரல் வந்தது.”ஹலோ சார், வணக்கம் சார்””ம் சொல்லுப்பா தம்பி.””சாரி சார், நான் ஒரு முக்கியமான வேலையா இருக்கேன். ஜான் நீங்க பேசுவீங்கனு இப்பதான் சொன்னா. இங்க ஒரே சத்தமா இருக்கு இஃப் யூ டோன்ட் மைன் ஒரு ஹாஃபனவர்ல நானே கூப்பிடவாசார்?””ம் சரிப்பா கூப்பிடுப்பா””சார் தேங்ஸ் சார்!”அழைப்பு துண்டிக்கப்பட்டது. முருகேசன் மறியல் கூட்டத்தையே பார்த்துகொண்டிருந்தார். போலீசார் பிரபாகரனிடம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தனர். முருகேன் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.