வேலைநிறுத்தத்திற்கு போக்குவரத்து ஊழியர்களா காரணம்? அவர்களின் நியாயமான கோரிக்கைகளை இழுத்தடித்தது யார்? பேச்சுவார்த்தையின் கதவுகளை மூடியது யார்? அவர்களின் பணத்தை சுரண்டியது யார்? கொள்ளையடித்தது யார்? பொதுமக்களின் அவதிக்கு மூல காரணம் யார்? அந்தக் கயமைத்தனம் பற்றி பேசாமல் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்து இருக்கிறது?

போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று தன் சதைகள் ஆட அதிவேகமாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த தொழிலாளர் விரோதச் சிந்தனையை, ‘அதிரடி உத்தரவு’ என்று வேறு ஓளிபரப்புகிறார்கள்.

எம் தொழிலாளர் வர்க்கம், இதுகுறித்து அஞ்சாமல் மோசடி அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கிறதே, அதுதான் அதிரடி!

– மாதவராஜ்

அதைக் கேட்டதா நீதிமன்றம்?

பஸ் போக்குவரத்து எனும் அத்தியாவசியப் பணியில் வேலைநிறுத்தம் கூடாது என்கிறார்கள்! அப்படியெனில் அங்கு பணிபுரிவோரின் அத்தியாவசியத் தேவைகளை, நியாயமான கோரிக்கைகளை உடன் நிறைவேற்றியிருக்க வேண்டாமா அரசு? அதைக் கேட்டதா நீதிமன்றம்?

 – அருணன்

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கையாளும் அரசாங்கத்தின் போக்கு புதியதல்ல. அ இ அதிமுகவின் அரசு அவ்வப்போது பின்பற்றும் உத்திதான். திரளும் கூட்டத்தைச் சொந்தக் கட்சிக்கு வாக்களிக்கும் கூட்டமா? மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களிக்கும் திரட்சியா? எனக் கணக்கிட்டே முடிவெடுக்கப்படுகிறது. அமைப்புரீதியாகத் திரளும் போக்குவரத்துத்துறை, கல்வித்துறை, அரசு ஊழியர்கள் போன்றோர் ஆளும் அ இ அதிமுகவுக்கு வாக்களிக்காத கூட்டம் என நம்புகிறது இந்த அரசு. எனக்கெதிரானவனுக்கு நான் ஏன் பரிந்துரை செய்யவேண்டுமென நினைப்பது தனிமனித மனோபாவம். ஓர் அரசும் அந்த மனோபாவத்தோடு இயங்க நினைத்தால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் உரிமைகளையும் முன்வைக்கும் கோரிக்கைகளையும் போராடும் மனிதர்களையும் வாக்கு வங்கித்திரட்சியாகக் கணிக்கும் அரசு அனைத்து மக்களின் அரசாக இருக்கமுடியாது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்..

– அ.ராமசாமி
நமது எழவு ஊடகங்களுக்கு காட்சி மொழி குறித்த அறிவே இல்லையா? அல்லது தடித்தனமா?
போராட்டம் Vs பாதிக்கப்பட்ட மக்கள் என்ற எதிர்வையே காட்சிப்படுத்துகின்றனர்.
போராட்டம் Vs அரசின் அயோக்கியத்தனம் என்ற புரிதலை உருவாக்க திட்டமிட்டு தவிர்கின்றனவே ஏன்?
அதுதான் அரசியல் வர்க்க அரசியல்.
– விஜய் ஆனந்த்
அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டம், நர்சுகள் போராட்டம், விவசாயிகள் போரட்டம், மீதேன் வாயு எடுப்பதற்கு எதிரான போராட்டம், இப்போது பேருந்து ஊழியர்கள் போராட்டம் போன்ற முதலாளித்துவ சமூக ஒழுங்கைக் குலைக்கிற, முதலாளித்துவ சமூகத்தில் தனக்குரிய உரிமைப் பங்கைக் கேட்கிற, அத்தகைய போராட்டங்களின் மூலம் போராடாமல் அடிமை உணர்வோடு குறுகிக்கிடக்கிற, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற பிற சமூகத்திரள்களுக்குப் போராட்டப் பாடம் சொல்லித்தருகிற அனைத்து அசைவுகளுக்கும் நீதி மன்றங்கள் திட்டமிட்டோ, தாமாக முன்வந்தோ முதலாளித்துவ சமூகத்தின் அநீதிகளை வழங்கும் அநீதி மன்றங்களாகவே செயல்படுகின்றன.
– இரவிக்குமார்
 
கனவு டிவி பிரேக்கிங் நியூஸ்: போக்குவரத்துத் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய நான், அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். உடனடியாக பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் திங்கள் கிழமையிலிருந்து உண்ணாவிரதம் இருப்பேன். (BGM: நான் எப்பவுமே ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா – அஜக்கு இன்னா அஜக்குதான் குமுக்கு இன்னா குமுக்குதான்)
– ராஜன்குறை
 
வருடத்தின் பாதி நாட்கள் விடுமுறையாகவும், பிரிட்டிஷ் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பங்களா சலுகைகளோடும் உலாவரும் நீதிபதி, போக்குவரத்து ஊழியர்களை நோக்கி “வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, brunch க்கு வர வேண்டிய அந்த போண்டாவும் சட்னியும் எங்கே என்று சப்தமிட்டார்!
– வாசுகி பாஸ்கர்
தொழிலாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு என ஒருவர் வழக்குத் தொடுத்ததை ஏற்றுத் அவர்கள் உடனே வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது நீதிமன்றம். அரசாங்கத்தின் உரிய ஊதிய உயர்வைத் தர மறுப்பதால் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு என ஒருவர் வழக்குத் தொடுத்திருந்தால் நீதிமன்றம் என்ன ஆணையிடும்?
– அ.குமரேசன்
ஊழியர்களின் உளைச்சலையும் அவர்களின் பாடுகளையும் ஒரு நீதிமன்றம் உதாசீனப்படுத்துமேயானால் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை. இங்கே இதுவரை இருந்த அரசுகள் போக்குவரத்துத் துறையை தனியாருக்கு போட்டியாக நடத்தவே முயன்றுள்ளார்கள். அரசு பஸ்ஸில் போனால் ப்ரேக் டவுன் ஆனாலும் மாற்று உடனே கிடைக்கும். டிக்கட் பணத்தைத் திருப்பி தருவார்கள் என்று எவ்வளவோ சௌகரியங்கள்.  இந்தக் கூமுட்டைகள் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்கிறார்களே. ஒரு முறை தீபாவளிக்கு போய் டிக்கெட் கேட்டால் தெரியும். ரஜினிகாந்த் படத்துக்கு கொள்ளையடிக்கும் அதே டெக்னிக் தான். கொள்ளையர்கள் ஊழல்வாதிகளின் முகமூடியாக நீதிபதிகள் மாறியுள்ளது தான் புதிய இந்தியா. வாழ்க.

– இளங்கோ கல்லானை
போராடும் மக்களை போலீஸ் நீதிமன்றம் போன்றவை ஒடுக்கும் என்பது தெரிந்ததுதான்.ஆனால் குறைந்தபட்ச நீதியாவது கிடைக்கும் என்பதால்தான் மக்கள் நீதிமன்றங்களின் முன்பு போராடுவதில்லை. ஆனால் ஒவ்வொரு போராட்டத்தின்போதும் நிதியரசர்கள் இப்படியே நடந்துகொண்டால் இனி மக்கள் அவர்களை எதிர்த்தும் போராடுவார்கள்.
– கருப்பு கருணா

பேருந்து சேவை வேண்டுமென மக்கள் கிளர்ந்தால் என்ன செய்வீர்கள்? என்று ஒருவர் கேட்டார். அப்படியொரு போராட்டம் நடந்தால், அதில் நானும், போக்குவரத்து தொழிலாளர்களோடு சேர்ந்தே சென்று பங்கேற்போம். அப்படிப்பட்ட குடிமக்களின் எண்ணிக்கை பெருகுவதுதான் நமக்கு அடிப்படைத் தேவையாகும்.

நாம் நமக்கான சேவைகளை தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி உறுதி செய்ய முடியாத அமைப்பை கேள்வியெழுப்ப வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், தனக்கு அரசு சேவைகளை உறுதி செய்ய மக்கள் போராடியிருந்தால், விழிப்போடு செயல்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும். நம் பேருந்துகள் இப்படி தரமற்றவையாக இருந்திருக்காது. லாபம் தரும் வழித்தடங்கள் தனியார்மயமாகியிருக்காது. ஆம்னி பேருந்துகளின் கொள்ளை தடுக்கப்பட்டிருக்கும். அந்த லாபமும் சேவைத்துறைக்கு திருப்பப்படிருக்கும்.

சமூக நல சேவைச் செயல்பாடுகளை ‘இழப்பு’ என்று வாதாடும் அபத்தம் நிகழ முடியாது.

– இரா.சிந்தன்

கன்டெக்டர் கலெக்சன் பணத்தை குடும்ப செலவுக்கு எடுத்துக்கிட்டா நிர்வாகம். நிதீ மன்றம் ஒத்துக் கொள்ளுமா? எங்களுடைய பணம் 7 ஆயிரம் கோடியை வாங்கிதராமல், எங்களின் கருத்தை கேட்காமல் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக உத்தரவிடுவது எப்படி சரியாகும்?

– அ.சவுந்தரராசன்

Leave A Reply

%d bloggers like this: