எளிய ஊழியர்களயும் மக்களையும் நீதிபதிகள் கையாள்வதை வைத்து தான், அவர்களது குணாம்சங்களை மதிப்பிட முடியும். முப்பது நாற்பது வருடங்கள், அதாவது வாழ்க்கையின் பெரும்பகுதியை பேருந்துகளிலேயே கழித்துவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள், தங்களது ஓய்வு கால பலன்களை நம்பித்தான், மகள்களின் திருமணம், மருத்துவ அறுவை சிகிச்சைகள், போன்ற குடும்பத்தின் பல முக்கிய விஷயங்களை திட்டமிடுகிறார்கள். தங்களது உழைப்புக்கான அந்த ஓய்வுகால பலன்கள் இல்லையென்றால் அந்த குடும்பமே ஸ்தம்பித்து விடும். போக்குவரத்து தொழிலாளர்களின் இத்தகைய ஓய்வூதிய பணமான 7000 கோடி ரூபாய் கையாடப்பட்டு, கடந்த ஏழு வருடங்களாக அவர்கள் உழைத்த பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது அரசு. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதனால் நிலைகுலைந்து போயுள்ளன.தங்களுக்கு கிடைக்கவேண்டிய சட்டப்படியான ஓய்வுகால பலன்களை வழங்கச் சொல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கலான ஆயிரக்கணக்கான வழக்குகளில், அந்த பணத்தை தவணை முறையில் வழங்க ஆயிரக்கணக்கான உத்தரவுகளை உயர்நீதிமன்றம் போட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவுகளை கூட ரோமம் என பாவித்து ஓதுக்கித்தள்ளியுள்ளது அரசு. அவ்வழக்குகளின் மீது தாக்கலான உயர்நீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் மிகமிக துச்சமாக கையாள்கிறது அரசு. பலநூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள், இயக்கங்கள், பேச்சுவார்த்தைகள் என நடத்தியும் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி, போக்குவரத்து தொழிலாளர்களை இந்த போராட்டத்திற்கு கொண்டுசென்றது அரசு தான். இதனால், பொதுமக்களுக்கு சிரமங்கள் உருவாகியுள்ளதும் யதார்த்தம் தான். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பத்தை சிதைக்கிற பொறுப்பற்ற அரசின் கொடுமைகளிலிருந்து, அந்த எளிய தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமையாகும். அந்த கடமைகளை செய்ய வக்கில்லை என்றால், தொழிலாளர்கள் அதை தங்களது ஜனநாயக உரிமைப்போராட்டங்கள் மூலம் அரசிடம் பெற்றுக்கொள்ளட்டும் என ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால், அரசின் ஈனச்செயல்களை நியாயப்படுத்துகிற வகையில் நடந்து கொள்வதும், “சம்பளம் பத்தலைன்னா வேலையை விட்டுப் போங்கடா” என்கிற ரீதியில் பேசுவதும் மேன்மக்களுக்கு அழகல்ல. இத்தகைய குரூரமான வார்த்தைகள் நீதிபீடத்தின் உச்சியிலிருந்து ஏவப்படுவது நீதித்துறைக்கே அவமானம். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்திற்கு எதிராக அரிப்பெடுத்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வந்த போது, அதை அந்த நீதிபதிகள் மனிதநேயத்தோடு சட்டப்படி கையாண்டது நிறைவாக உள்ளது. எளிய மக்களின் வலிகளை உள்வாங்கி நீதிபரிபாலனம் செய்கிற அத்தகைய நீதிபதிகள் தான் மேன்மக்கள். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த போராட்டம் கையாளப்படுகிற விதமும் அள்ளிவீசப்படுகிற அதீத வார்த்தைகளும் கவலையளிப்பதாகவே உள்ளது. போராடுகிற தொழிற்சங்கங்களை ஒருவார்த்தை கூட கேட்காமல், அவர்களின் பிரச்சனைகள் என்ன என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல், தரங்கெட்ட அரசியல்வாதிகளைப் போல கனம் பொருந்திய நீதிமன்றங்கள் பொறுப்பற்ற வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து பணிபுரிகிற தொழிலாளர்களின் சட்டப்படியான நியாயமான கோரிக்கைகள் பக்கம் நின்று நியாயம் வழங்குவதே, எளிய மக்களுக்கு நீதித்துறை என்கிற அமைப்பின் மீதான நம்பிக்கைகளையும், மரியாதையையும் தக்கவைக்க உதவும். அதை விட்டுட்டு, பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்களை சீரழிக்கிற தரங்கெட்ட ஆட்சியாளர்களின் மனநிலையில் இருந்து கொண்டு, எளிய தொழிலாளர்களுக்கு எதிரான மமதையான அணுகுமுறைகளை சில நீதிபதிகள் கைவிடுவது நீதித்துறைக்கு பெருமைசேர்க்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.